Home ஆன்மிகம் ஆதி சங்கரர்: ஜெகத் குரு ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் ஜெயந்தி விழா 2020!

ஆதி சங்கரர்: ஜெகத் குரு ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் ஜெயந்தி விழா 2020!

663
0

ஆதி சங்கரர் ஜெயந்தி-Adi Sankara Jayanthi 2020: ஆதி சங்கரரின் பிறப்பு, ஆதி சங்கர பகவத் பாதரின் அத்வைதம் தத்துவம், ஜகத்குரு அமைத்த பீடங்கள், ஆதி சங்கரரின் இந்து மத சீர்த்திருத்தங்கள்.

நமது பாரத தேசத்தில் வாழும் மக்களை சீர்திருத்தம் செய்வதற்கு இம்மண்ணில் எண்ணற்ற மகான்களும, யோகிகளும், சித்த புருஷர்களும் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

உண்மையில் அவர்கள் யாரும் மறையவில்லை அவர்கள் அனைவரும் நித்திய சிரஞ்சீவிகளாக நம்மை காத்தும், நெறிபடுத்தியும் வருகின்றனர்.
அப்படிப்பட்ட மகான்களில் ஜகத்குரு எனப் போற்றப்படும் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதார் மிகவும் முக்கியமானவர் ஆவார்.

ஆதி சங்கரரின் பிறப்பு

ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்து இன்றளவும் பல விவாதங்கள் நடந்து வருகின்றது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் என்று கூறுவதையே பலரும் ஏற்கின்றனர்.

இன்றைய கேரள மாநிலம் “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். எட்டு வயதில் சந்நியாசம் பெற்று துறவறம் சென்றார்.

இவரது காலத்தில் இந்து மதம் “துவைதம்” தத்துவத்தை நம்பியும், பௌத்த மற்றும் சமண மதத்திற்கு மாற்றபட்டும் வந்தது.

துவைதம் என்பது இரண்டு நிலை. ஆன்மாவும், பரமாத்மாவும் வேறு வேறு. இறைவனும் இந்த பிரபஞ்சமும் வேறானவை என்கிற கருத்தை கொண்டது.

இதனை மாற்றவும் பரபிரம்ம தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும் பாரதத்தின் அனைத்து இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.

ஆதி சங்கரரின் அத்வைத தத்துவம்

அத்வைதம் என்றால் இரண்டற்ற நிலை என்பது பொருளாகும். அதாவது ஜீவன் வேறு இறைவன் வேறல்ல இரண்டுமே ஒன்று தான். “அஹம் பிரம்மாஸ்மி” நாமே பரபிரம்மம் என்ற உயர்ந்த தத்துவத்தை உலகிற்கு உணர்த்தினார்.

பல்வேறு விவாதங்கள் மற்றும் மத குருமார்களின் கருத்துகள் என அனைத்து வாதங்களிலும் வெற்றி கொண்டு அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்தார்.

அத்வைதம் நான்கு கொள்கைகளை அடிப்படையாக கொண்டது.

• பிரம்மம் ஒன்றே எப்போதும் நிலைத்திருக்கும். அந்த பரமாத்மாவை தவிர வேறு எதுவும் இல்லை.

• பிரம்மதிற்கு உருவம் கிடையாது. அது நிர்க்குணபிரம்மம் ஆகும். நாம் மனதால் நினைக்கும் குணங்களை கொண்டு உருவகப்படுத்தும் கடவுள் ஸகுணப் பிரம்மம் ஆகும்.

• அனைத்து உயிர்களிடமும் இருக்கும் ஜீவாத்மா மற்றும் மெய்பொருளாக விளங்கும் பரமாத்மா இரண்டும் ஒன்றே ஆகும்.

• உலகம் முழுதும் உண்மையற்ற மாயையாகும் நிலையற்றது. இது மாறி கொண்டே இருக்கும் “பரபிரம்மம்” ஒன்றே நிலையானது.

இவ்வாறு மத்வரின் துவைதமும், புத்தரின் பௌத்தமும் இணைந்த ஒன்றே அத்வைதம் ஆகும். இதையே பின்நாளில் இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என தெளிவாக கூறினார்.

ஜகத்குரு அமைத்த பீடங்கள்

இந்து மதமானது சைவம், வைணம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என பிரிந்து இருந்தது. இதை அனைத்தையும் ஒன்று சேர்த்து சநாதன தர்மத்தை நிலைநாட்ட பாரதம் முழுதும் திக்விஜயம் செய்தார்.

கபாலிக சமயத்தை தடுத்து ஆட்கொண்டார். கோவில்களில் உயிர்பலியை தடுத்தார். ஜீவகாருண்யத்தை எடுத்துரைத்தார்.

சிருங்கேரி சாரதா பீடம், கோவர்தன பீடம், துவாரகை காளிகா பீடம், ஜோஷி மடம், காஞ்சி காமகோடி பீடம் முதலியற்றை உருவாக்கி அவரின் சிஷ்யர்களை அதற்கு பீடாதிபதிகளாக நிர்மாணம் செய்தார்.

அதன் மூலம் அத்வைத கொள்கைகளை பீடாதிபதிகள் இன்றளவும் பரப்பி வருகின்றனர்.

பகவத் பாதரின் படைப்புகள்

இந்து சமயத்தின் அடிப்படையான பத்து உபநிடதங்களின் விளக்க உரை, பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை விளக்க உரை.

சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, கனக தாரா ஸ்தோத்திரம், விவேக சூடாமணி, ஆத்ம போதம், உபதேச சாஹ்ரி, பஜ கோவிந்தம், சிவானந்த சாங்கியம், சுப்ரஹ்மண்ய புஜங்கம், உபதேச சாஹஸ்ரி, விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கவுரை, மனீஷா பஞ்சகம், நிர்வாணஷ்டகம் என பல நூல்களை நமக்கு அளித்துள்ளார்.

கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழையின் வீட்டில் கனக நெல்லிக்காய் மழை பொழியச் செய்தது, நர்மதையை தனது கமண்டலத்தில் அடக்கியது, கூடு விட்டு கூடு பாய்வது, காமாட்சி அம்மனின் கோபம் தவிர்க்க ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை, பல அம்பிகை கோவில்களில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து அம்பிகையின் அருள் பெற்றது என பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

இமயம் முதல் குமரி வரை அனைத்து கோவில்களுக்கும் தல யாத்திரை மேற்கொண்டு மக்களின் அக்ஞானத்தை போக்கினார். தனது 32-ஆம் வயதில் கேதார்நாத்தில் பரபிரம்மத்துடன் இரண்டற கலந்தார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி 2020

ஆதிசங்கரர் ஜெயந்தியானது வைசாக மாதம் சுக்ல பட்ச பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி செவ்வாய் கிழமை வளர்பிறை பஞ்சமி திதியான இன்று “சங்கர ஜெயந்தி” விழா கொண்டாடப்படுகிறது.

இன்றளவும் தெய்வங்களை பிரித்து போட்டி, விவாதங்கள், பிரச்சனைகளை உண்டு பண்ணி அதில் குளிர்காயும் பல போலி குருமார்களிடம் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அனைவரும் இந்நாளில் அத்வைத கொள்கைகளை சிறந்த குரு மூலம் கற்று தெளிவு பெற்று மாயையை துறந்து பரமாத்மாவுடன் இணைவோம். ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர! என மனதார ஜகத்குருவின் நாமம் சொல்லி நற்கதி அடைவோம்.

“ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்”

Previous articleசீட்டு கட்டு விளையாடியதால் விபரீதம் 40 பேருக்கு கொரோனா; ஆந்திர பிரதேசம்
Next article28/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here