Akshaya Tritiya: அட்சய திருதியை ஏன் கொண்டாடப்படுகிறது? அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுமா? அட்சய திருதியையில் உப்பு ஏன் வாங்க வேண்டும்?
அட்சய திருதியை அன்று என்ன காரியங்கள் செய்யலாம் & செய்யக்கூடாது?
இந்தியாவில் சில திதிகளுக்கென்று முக்கியத்துவம் தரப்படுகிறது அப்படிப்பட்ட திதிகளில் தான் நற்காரியங்கள் செய்யப்படும். மேன்மையை தரும் தினங்களாக அத்தகைய நாட்களை சிறப்பு மிகுந்ததாக கருதுகின்றனர்.
இந்த வரிசையில் இந்து மற்றும் சமணர்களின் முக்கிய தினமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை முடிந்து மூன்றாவது திதி திருதியை ஆகும். சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும்.
அட்சயம் என்றால் சமஸ்கிருதத்தில் குறையாதது என்று பொருள். இந்த தினத்தில் எதை செய்தாலும் அது குறையாமல் ஆண்டு முழுதும் நிறைந்திருக்கும் என்று நம்புகின்றனர்.
அட்சய திருதியை சிறப்புகள்
அட்சய திருதியை (Akshaya Tritiya) திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த தினமாக கருதப்படுகிறது. பிரம்மன் திரேதா யுகத்தை உருவாக்கியதும் அந்த நாளில் தான் எனப்படுகிறது.
பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும் இந்த சிறப்பு மிக்க நாளில் தான். காசியில் அன்னபூரணி சிவபெருமானிற்கு அன்னம் அளித்த நன்னாள் இதுவே ஆகும்.
சமணர்களின் தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷப தேவரின் நினைவாக கூறப்படுகிறது.
மேலும் ஜோதிடரீதியாக சூரியன் மேஷ ராசியில் உள்ள மாதம் சித்திரை ஆகும். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூர்ணத்துவம் அடைய வளர்பிறையையாக வளரத் துவங்கும் மூன்றாம் நாள் இந்த திருதியை ஆகும்.
அட்சய திருதியையில் என்ன காரியங்கள் செய்யலாம்?
கங்கை, யமுனை, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் புனித நீராட புண்ணியங்களை தரும்.
அட்சய திருதியை அன்று உண்ணா விரதமிருந்து திருமால் மற்றும் மகாலட்சுமியை பூஜிக்க உகந்த நாளாகும்.
பரசுராமர் ஜெயந்தி என்பதால் பரசுராமரை பூஜிக்க வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்ய நன்மைகள் பெருகும்.
இந்நாளில் ஞானத்தை பெற தானங்கள் செய்ய ஏற்ற நாளாகும். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய உகந்த நாளாகும்.
ஏழை எளியவர்களுக்கு இந்நாளில் தானியங்களை, உடைகளை தானமாக அளிப்பது பாவங்களைப் போக்கும்.
யாகங்கள், வேத பாராயணங்கள் செய்யலாம் புதிய காரியங்களை துவக்கலாம். பரிசில்களை வழங்கலாம்.
தங்கம், வெள்ளி, வைரம், சாளகிராமம், உருத்திராட்சம் வாங்கலாம். இந்நாளில் வாங்குவதால் பொருளாதார பஞ்சங்கள் நீங்கும்.
புதிய தானியங்களை வாங்குவதால் தானிய பஞ்சங்கள் தீரும். தானியங்களை வைத்து பூஜைகள் செய்ய உகந்த நாளாகும். தயிர் சாதத்தை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்க முன் ஜென்ம பாவங்கள் தீரும்.
அட்சய திருதியையில் ஏன் உப்பு வாங்க வேண்டும்?
“உப்பில்லா பண்டம் குப்பைக்கே” என்பது பழமொழியாகும். அந்த அளவிற்கு உப்பு என்பது நமது அத்யாவசிய தேவையாகும்.
உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது. மகாலட்சுமியும் கடலில் இருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியுடன் தோன்றியதால் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கூறப்படுகிறது. எனவே தான் எந்த சுபகாரியம் ஆனாலும் உப்பை நம் முன்னோர்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த அட்சய திருதியை தினத்தில் உப்பு வாங்குவதால் மங்களம் பெருகும் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
நாம் அனைவரும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை விட தானங்கள் செய்வதும், நம்மால் வாங்க இயன்ற உப்பை வாங்கி மங்களம் பெறலாம்.
அட்சய திருதியையில் செய்யக் கூடாதவை
எந்த திதியாக இருந்தாலும் அன்றைய தினத்தின் கிரக நிலை நேர காலங்களை பொருத்தே நற்காரியங்கள் செய்ய வேண்டும்.
பஞ்சாங்க அடிப்படையில் தான் செயலாற்ற வேண்டும். குருட்டுத்தனமாக நகை வியாபாரிகளின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
மேலும் கடன்களை பெற்று தங்கநகை வாங்கி கடனாளி ஆக வேண்டாம். மடமையாலும், மூடநம்பிக்கைகளாலும் இருப்பது தவறு. நமக்கு தேவையான ஒன்று உணவு பஞ்சம் இல்லாமல் இருப்பதே ஆகும்.
அட்சயதிருதியை ஆனாலும் கிரக நிலையை கணக்கிட்டு விலை உயர்ந்த பொருட்களை வாங்கவும். அப்பொழுது தான் நன்மை கிடைக்கும்.
2020-இல் அட்சய திருதியை
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்று கிழமை வருகின்றது. சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாளில் வருவதால் கோதுமை தானியம் வாங்கவும், தானமாக வழங்கவும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
அனைவரும் மகாலட்சுமியின் அருள் பெற்று சகல சௌபாக்கியம் பெற்று வாழ பிராத்தனை செய்வோம்.