ஆடி மாத தரிசனம் 8: கண் நோய் தீர்ப்பாள் அன்பில் மாரியம்மன். ஏழு குழந்தைகளுடன் காட்சி தரும் அன்பில் மாரியம்மன். தஞ்சம் என்று வந்தோரை காப்பாள் மாரியம்மன்.
தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாரி என்றாலே மழை தெய்வமாகவும், மக்களை பிணியிலிருந்து காக்கும் தெய்வமாகவும் அறியப்படுகிறாள்.
இப்படிப்பட்ட மாரியம்மன் இல்லாத ஊர்களே கிடையாது தமிழகத்தில். அதிலும் தமிழகத்தில் ஏழு மாரியம்மன் கோவில்கள் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மக்களின் துயரை துடைப்பவளாக அன்னை மாரிகா தேவி அமர்ந்த திருத்தலமே அன்பில் மாரியம்மன் ஆலயம் ஆகும்.
அன்பில் திருக்கோவில் வரலாறு
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்த பொழுது இந்த அம்பிகை இங்குள்ள தல விருட்சமான வேப்பமரத்தடியில் தங்கினாள் என்று கூறப்படுகிறது.
அதன் பின்பு உறையூரை ஆண்ட சோழ மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. சமயபுர மாரியம்மனும் அன்பில் மாரியம்மனும் சகோதரிகள் என்று மக்கள் கூறுகின்றனர்.
மற்ற அம்மன் கோவில்களில் அம்மனுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் அன்பில் ஆலயத்தில் ஏழு குழந்தைகளுடன் அம்பிகை காட்சி தருகிறாள்.
சிறிய கோவில் என்றாலும் அம்பிகையின் கீர்த்தியானது உலகெங்கும் பரவியுள்ளது. கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாக உள்ளாள் அன்பில் மாரியம்மன்.
கண் நோய் தீர்க்கும் மருந்து!
அன்பில் மாரியம்மன் கோவிலில் கண் பிரிச்சனைகளை தீர்க்கும் பச்சிலை மருந்து ஊற்றப்படுகிறது.
கோவிலில் தினமும் மதியம் 12 மணிக்கு கோவில் பூசாரி கண் நோய்களுடன் செல்பவர்கள் கண்களுக்கு பச்சிலை மருந்து ஊற்றுகிறார்.
அம்மருந்தினால் பூரண குணமடைந்த ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அம்மை, கண் நோய் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் இவளை தரிசித்தாலே நீங்கும்.
குழந்தை வரம் வேண்டுவோர் விரதமிருந்து வழிபட்டால் குழந்தை வரம் தருவாள் மாரியம்மன்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
ஆனியில் மகா சண்டியாகம் நடைபெறுகிறது. வைகாசியில் பஞ்ச பிரகார உற்சவமும் நடைபெறுகிறது.
மக்களை பெற்ற மகா மாரியம்மனாக அனைவரையும் காத்தருள்கிறாள் அன்பில் மாரியம்மன்.
அனைவரும் லால்குடி சென்றால் தவறாமல் அன்பில் மாரியம்மனை தரிசனம் செய்து அவள் அருள் பெறுவோம்.
அமைவிடம்: அன்பில் மாரியம்மன் திருக்கோயில், அன்பில், லால்குடி, திருச்சி மாவட்டம் .
தரிசன நேரம்: காலை 7 முதல் மதியம் 1 வரை. மாலை 4 முதல் இரவு 8 வரை.
ஆடி மாத தரிசனம் தொடரும்..!