Home ஆன்மிகம் ஆடி மாத தரிசனம் 4: அள்ளி கொடுப்பாள் அத்தனூராள்!

ஆடி மாத தரிசனம் 4: அள்ளி கொடுப்பாள் அத்தனூராள்!

347
0

ஆடி மாத தரிசனம் 4: அள்ளி கொடுக்கும் அத்தனூர் அம்மன்! பக்தர்களை காவலாய் இருந்து காக்கும் அத்தனூர் அம்மன்!

ஆதிசக்தியை நினைத்தாலே போதும் சகல தொல்லைகளும் நீங்கும். உயிர் உள்ள வரை அம்பிகையை துதிக்கும் பாக்கியம் ஒன்றே போதும் என்று வாழ்ந்து வருபவர்கள் பலர். இதை தான் பாரதி

“தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்” என்றார்.

அந்த அளவிற்கு கூப்பிட்டவுடன் ஓடி வந்து நம்மை காத்து அருள்பவள் தான் தாய்.

அந்த பராசக்தியின் வடிவங்களில் அனைவரும் அஞ்சும் கோர வடிவங்கள் பலவுண்டு. ஆனால் நாம் அஞ்ச தேவையில்லை துஷ்டர்களை மட்டுமே அவள் வேர் அறுப்பாள்.

அப்படி பக்தர்களை காக்கும் கருணை கடலாய் இருந்து காப்பவளே நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுக்காவில் உள்ள அத்தனூர் அம்மன்.

திருக்கோவில் வரலாறு

இந்த அன்னையானாவள் கடையெழு வள்ளல்களில் ஒருவரான கொல்லிமலை ஆண்ட வல்வில் ஓரி காலத்தில் அவரால் வணங்கப்பட்ட தெய்வம் என்கிறது செவிவழி செய்தி.

மேலும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் காங்கேயம் பகுதியில் இருந்து குடிபெயர்ந்த கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களுடன் காவலாக இவளை அழைத்து வந்து இங்கே குடியமர்த்தி கொண்டு அன்னையை தங்களுக்கு காவலாக இங்கேயே பிரதிட்டை செய்து வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதிலிருந்து இந்த திருக்கோவிலின் தன்மையினை அறிய முடிகிறது. பழையோள் என்று சொல்லப்படுகின்ற கொற்றவையே இந்த அத்தனூர் அம்மன் ஆவாள்.

காரணம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் தம் மன்னன் வெற்றி பெற வேண்டும் என்று தங்களை தாங்களே பலியிட்டு கொள்ளும் நவகண்டம் சிற்பமானாது அன்னைக்கு நேர் எதிரே வெளிப்புறத்தில் உள்ளது.

அத்தனூர் அம்மன் சிறப்பு

கோவிலுக்கு வெளியே பல நூறு ஆண்டுகளாக உள்ள முதிர்ந்த ஆலமரங்கள். உள்ளே நுழைந்தால் காவலுக்கு அய்யனார். அன்னைக்கு எதிரே பெரிய குதிரை சிற்பங்கள்.

மேலும் கணபதி சன்னதி, நாக கன்னிகள் சன்னதிகள் உள்ளன. உள்ளே கருவறைக்கு முன் தூவார சக்திகள் நின்றபடி காவல் புரிகின்றனர்.

கருவறையில் வடக்கு முகம் நோக்கி எட்டு திருக்கரத்துடன் அமர்ந்து அசரனை காலால் மிதித்து வதம் செய்யும் கோலத்தில் தெற்று பற்களுடன் அருள்புரிகிறாள்.

“அஞ்சாதே நான் இருக்கிறேன்” என்று கருணை பொங்கும் விழிகளை காண கண் கோடி வேண்டும்.

கொங்கு வேளாளர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கியும். ஊரை காக்கும் காவல் தெய்வமாகவும், தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர் துடைக்கும் அன்னையாகவும் விளங்குகிறாள்.

சாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தினரும் இவளை அன்னையாய் வணங்கி அருள் பெறுகின்றனர்.

அள்ளி கொடுப்பாள் அத்தனூராள்!

அஞ்சலென்று வருபவர்க்கு ஆதரிக்கும் அத்தனூர் அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பகைவர் தொல்லை, திருமண தடை, வழக்கு பிரச்சினைகள், குழந்தையின்மை என அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் மகா சக்தியாக உள்ளாள் அத்தனூராள்.

அன்னைக்கு தற்பொழுது பலாலயம் நடைபெற்று பெரிய அளவில் இராஜ கோபுரத்துடன் கூடிய திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.

அனைவரும் அத்தனூர் சென்று அன்னையை தரிசித்து அவள் கருணையை பெற்று நல்வாழ்வு பெறுவோம்.

அமைவிடம்: சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அத்தனூர் அம்மன் கோவில்.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here