ஆடி மாத தரிசனம் 7: வீடே கோவில். கோவிலே வீடு. நெமிலி பாலா பீடம் வரலாறு மற்றும் நெமிலி பாலா திரிபுரசுந்தரி அம்மன் சிறப்புகள்.
சிவத்தை ஆளும் அந்த பராசக்தியின் மகிமைகளும், அவள் தானாக விருப்பமொடு வந்தமர்ந்த புராணங்களும் பல உள்ளன.
ஒருவர் மனதார பக்தி செலுத்தினால் போதும் அவளாக நம்மை தேடி ஓடி வந்து விடுவாள் என்பது திண்ணம்.
அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் குழந்தை வடிவமே பாலா திரிபுரசுந்தரி ஆவாள். குழந்தை குணம் கொண்ட அம்பிகை குழந்தை பாலாவாக வந்து அமர்ந்த இடமே நெமிலி பாலா பீடம் ஆகும்.
வீடே கோவில்! கோவில் வீடு!
இராமசுவாமி ஐய்யர் என்பவர் வேலூர் மாவட்டம் தாங்கி என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு அவ்வூரை விட்டே வெளியேறினார்.
குடும்பத்தோடு நெமிலி என்கிற இவ்வூருக்கு வந்தார். தங்குவதற்கு இடம் கிடைக்கும் வரை அவ்வூரில் இருக்கும் ஒரு பாழடைந்த சத்திரத்தில் தங்களாம் என்று முடிவு செய்து அங்கே தங்கினர்.
அவ்வூர் மக்கள் அங்கே பிசாசு உள்ளது எனவும் தங்க வேண்டாம் எனவும் கூறினர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சத்திரத்தை தூய்மை செய்து விளக்கேற்றி இரவு தங்கினர்.
இருப்பினும் இராமசுவாமி ஐயர் இரவு முழுதும் மந்திர ஜபம் செய்தார். விடிந்ததும் ஊர் மக்கள் இராமசுவாமி ஐயர் குடும்பம் ஒரு பாதிப்புமின்றி இருப்பதை கண்டு அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்ந்து நிரந்தரமாக அவ்வூரில் தங்க அனுமதி அளித்தனர்.
நாட்கள் கடந்தது இராமசுவாமி ஐயரின் மகன் சுப்ரமணிய ஐயர் கனவில் ஒன்பது வயது பெண் தோன்றி “அன்னை இராஜ இராஜேஸ்வரியின் கட்டளையின் படி தான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வருவதாகவும், தன்னை எடுத்து சென்று வைத்து பூஜித்தால் தொட்டதெல்லாம் துலங்கும் எனவும் கூறி மறைந்தாள்”.
மறுநாள் சுப்ரமணி நடந்ததை ஊராரிடம் கூறி ஆற்றுக்கு சென்று தேடினார். அன்னை கிடைக்கவில்லை. நம்பிக்கையை விடாது மறுநாளும் சென்று தேடினார் பாலா கிடைக்கவில்லை.
மிகுந்த வேதனையோடு திரும்பினார். அடுத்த நாளும் சென்று தேடினார் கிடைக்கவில்லை. இறுதியாக பாலாவை நினைத்து ஒரு முறை ஆற்றில் மூழ்கினார். பாலா அவர் கைகளில் வந்து அமர்ந்தாள். சுண்டு விரல் அளவு மட்டுமேயான திருவுருவம் கிடைத்தது.
அவளை கொண்டு சென்று தன் வீட்டிலேயே பிரதிட்டை செய்தார். அவரின் வீடே பாலா பீடம் ஆனது. பாலா இங்கே நவராத்ரி நாயகியாக அனைவராலும் கொண்டாடப்படுகிறாள்.
நவராத்ரி விழா இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சாக்லேட் பாலா!
நெமிலி பாலா பீடம் அழகிய வீட்டில் அமைந்த திருக்கோவில் ஆகும்.
“நான் பார்க்க நினைப்பவர்கள்தான் என்னைப் பார்க்க வருவார்கள். என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோயிலுக்குத்தான் செல்வார்கள். கோயிலுக்குச் செல்ல அழைப்பு தேவையில்லை; நினைப்பே போதும். என் வீட்டிற்கு வர நினைப்பு மட்டும் போதாது; எனது அழைப்பும் வேண்டும்.” – என்பது பாலாவின் வாக்காகும்.
சிறு குழந்தை என்பதால் இவளுக்கு சாக்லேட் மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும். பிரசாதமும் அதுவே ஆகும்.
அனைவரும் செல்லமாக “சாக்லேட் பாலா” என இவளை அழைக்கின்றனர்.
காஞ்சி மகா பெரியவா ஒரு வாரம் வந்து தங்கி இங்கே பூஜைகள் செய்துள்ளார்.
ஆறாவது தலைமுறையாக இங்கே சுப்ரமணிய ஐயரின் வம்சாவளிகள் பாலா பீடத்தை நிற்வகித்து வருகின்றனர்.
குழந்தையாய் ஓடி வருவாள் பாலா!
ஞானத்தை வழங்கும் சரஸ்வதியாக, திருமண வரமருளும் பார்வதியாக, செல்வத்தை வாரி வழங்கும் இலக்குமியாக அன்னை பாலா அருளாட்சி புரிகிறாள்.
பெரிய பூஜைகள் மந்திரங்கள் தேவையேயில்லை குழந்தயை பார்க்க போவது போல் இனிப்பு மிட்டாய்களை வாங்கி சென்றாள் போதும். குழந்தையாய் நம்முடன் வருவாள் நெமிலி பாலா திரிபுரசுந்தரி.
நமது கஷ்டங்கள் குறைகளை பொசுக்கி நல்லநிலை அருள்வாள் அன்னை பாலா.
நாமும் ஒருமுறை அவளை காண வரம் வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டு அவள் அழைப்பு வந்தவுடன் சென்று தரிசிப்போம்.
அமைவிடம்: நெமிலி பாலா பீடம், நெமிலி, வேலூர் மாவட்டம். தொலைபேசி: 04177-247216.
தரிசன நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.