இன்று வளர்பிறை சஷ்டி – Today Shasti Special Article: முருக பக்தர்களுடன் துணையிருப்பார் பாம்பன் சுவாமிகள்! முருக பக்தரை பாம்பன் சுவாமிகள் சூட்சும வடிவில் காத்த உண்மை சம்பவம்.
தமிழ் கடவுள், அழகன், குகன், கார்த்திகேயன் என்று பல திருப்பெயர்களில் துதிக்க படுபவன் முருகன். முருகனின் கருணைக்கு எல்லையே இல்லை. அதனால் தான் அவனை சரணாகதி அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்கள் பலருண்டு.
அருணகிரிநாதர், வள்ளலார், கச்சியப்ப சிவாசாரியார் என பல மகான்கள் முருகனிடம் ஐக்கியமாகி மக்களுக்கு இன்றளவும் தாங்கள் பெற்ற அருளாற்றலை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பிறந்து. குன்று தோறும் இருக்கும் குமர கடவுளின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தி சைவ நெறியை நிலை நாட்டிய மகான் தான் “பாம்பன் சுவாமிகள்“.
யார் இந்த பாம்பன் சுவாமிகள்?
பாம்பன் சுவாமிகள் மே மாதம் 30ஆம் தேதி, 1929 அன்று குமரனுடன் கலந்தார். இவரது ஜீவ சமாதி சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ளது.
சண்முக கவசம், பஞ்சாமிர்த வர்ணம், குமார் ஸ்தவம் என மொத்தம் 6666 பாடல்களை முருக கடவுளிற்கு பாடியுள்ளார். முருகன் அருளால் பல்வேறு தொண்டுகளையும், சேவைகளையும் புரிந்துள்ளார்.
இவர் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை முருக பக்தர்களை சூட்சும ரூபத்தில் காத்து வருகிறார் என்பது அனுபவ பூர்வ உண்மை. பலரது வாழ்நாளில் சுவாமிகள் சூட்சும வடிவில் வந்து அருள்புரிந்துள்ளார்.
அப்படி அவரை உணர்ந்த பக்தர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வை நம்முடன் பகிர்ந்து உள்ளார் அதனை காண்போம்.
முருக பக்தர்களை காப்பார் பாம்பன் சுவாமிகள்!
“நான் முருகன் கோவிலில் சிறு தொண்டுகள் புரிந்து வருபவன். பணி நிமித்தமாக 2014-ஆம் ஆண்டு சென்னைக்கு செல்லும் நிலையால் சேலத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டி இருந்தது.
நான் பணியில் இருந்த அலுவலகம் அருகில் தான் திருவான்மியூர். பல முறை பாம்பன் சுவாமிகளின் சமாதியை கடந்து சென்றுள்ளேன்.
ஆனால் அவரை பற்றி அப்பொழுது பெரிதும் அறியாததால் ஏதோ ஒரு சாமியார் சமாதி என்று எண்ணி ஒரு நாள் கூட உள்ளே சென்றது இல்லை.
இப்படியே நாட்கள் கழிந்தது. ஒரு நாள் பணி நிமித்தமாக திருவான்மியூர் செல்ல வேண்டி இருந்தது வழக்கம் போல் சுவாமிகள் கோவிலை கண்டும் காணாமல் போய் கொண்டு இருந்தோம் நானும் என் நண்பனும்.
பணி முடிந்து திரும்பி வரும் போது எதிர்பாராத விதமாக பயங்கர மழை. தற்போது சுவாமிகள் இருக்கும் இடத்திற்கு இரண்டு வீதிகள் தள்ளி ஓரிடத்தில் மழைக்கு ஒதிங்கினோம்.
பேய் மழை என சொல்லும் அளவிற்கு மழை அதிகரித்து தெரு முழுதும் தண்ணீர் ஆர்பரித்து ஓடியது.
சென்னை மழை
அனைவருக்கும் தெரியும் சென்னை மழை என்றால் எப்படி நீர் ஓடுமென்று. ஒரு மணி நேரமாக நகர இயலாமல் தவித்தோம். ஓடும் தண்ணீரின் அளவும் ஏறி கொண்டே போனது.
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு கார் வந்து நாங்கள் இருக்கும் இடத்தில் வந்து நின்றது. கார் ஓட்டி வந்தவர் யாரென்றும் தெரியாது. காரில் ஏறுமாரு வந்தவர் கூறினார்.
எங்களுக்கு ஆச்சரியம் சென்னையில் கேட்டாலே உதவி செய்ய எவரும் வரமாட்டனர். கேட்காமல் உதவுகிறாரே என்று. எங்கள் மனதில் சிறு தயக்கமும் இருந்தது. இருந்தாலும் வடிந்து ஓடும் நீரின் அளவும் வேகமும் அதிகரித்ததால் காரில் ஏறி கொண்டோம்.
உள்ளே போனதும் இன்னொரு ஆச்சரியம் காரணம் காரில் உள்ளே எப்பொழுதும் கண்டும் காணாமல் போகும் அதே சாமியார் படம். ஆம், பாம்பன் சுவாமிகள் திருப்படம் தான் அது.
கார் ஓட்டி வந்தவர் நாங்கள் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு காரை ஓட்ட துவக்கினார். நாங்கள் பயணித்த சிறு நிமிடங்களில் நாங்கள் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு ஆளை இழுத்து செல்லும் அளவு தண்ணீர் பாய்ந்து ஓடியது.
இந்நேரம் அங்கு இருந்திருந்தால் எங்கள் நிலை எண்ணவாகி இருக்குமென்று யோசித்தேன். அப்பொழுது கூட சுவாமிகளின் கருணை என நான் உணரவில்லை.
பத்திரமாக இருப்பிடம் கொண்டு சேர்த்தார். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அந்த கார் உரிமையாளர் உதவினார்.
பின் சில நாட்களில் செய்திதாளில் சுவாமிகளை பற்றி கட்டுரை கண்டேன் “முருக பக்தரை காப்பார் பாம்பன் சுவாமிகள்” என்று. பக்தர்கள் ஆபத்தில் அவர் காத்த நிகழ்வுகளை படித்து அதிர்ந்தேன்.
அப்போது தான் புரிந்தது எமது முருகபக்திக்கு சுவாமிகளே உயிர் காக்க செய்த உதவியென்று. கண்ணீர் மல்க அவருக்கு நன்றி செலுத்தினேன்.
அவரின் புகைப்படம் அன்றே காரில் எனக்கு இதை உணர்த்தியது அதை நாம் தான் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்ந்தேன்.
யாரென்று அறியாத எனக்கு அதன் பிறகு தான் அவரை பற்றி படிக்க இயன்றது. அனைவரும் கூறுவது முருக பக்தருக்கு சூட்சும வடிவில் வந்து சுவாமிகள் உதவுவார் என்பது உண்மை.
இது எதேர்ச்சியாக நடந்த விடயம் என நினைக்கலாம். ஆனால் ஆபத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அவர் கருணையை உணர முடியும்.
அன்று முதல் சுவாமிகளின் பக்தன் ஆனேன்” என்று அந்த முருக பக்தர் நிகழ்வினை கண்ணீர் மல்க கூறி முடித்தார்.
ஆம், நாம் வாழும் தமிழகத்தில் இது போலவே சித்தர்களும் மகான்களும் பல்வேறு விதமாக மக்களை நல்வழி படுத்தவும், ஆபத்தில் சூட்சும ரூபத்தில் உதவியும் வருகின்றனர். அதை உணந்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
சித்திரை வளர்பிறை சஷ்டியான இன்று எல்லாம் வல்ல முருகனையும், கருணை கடலான பாம்பன் சுவாமிகளையும் இந்த பிணிகள் நிறைந்த காலத்தில் இருந்து உலகை காக்க பிராத்திப்போம்.