ஆடி மாத தரிசனம் 9: புவனங்களை ஆளும் புதுக்கோட்டை புவனேஸ்வரி. ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம். அஷ்டா தச புஜ மகாலட்சுமி & புவனேஸ்வரி ஒரே நேர்க்கோட்டில் அமர்ந்த ஆலயம்.
ஏழு புவனங்களை ஆளும் அன்னை புவனமாதா பல்வேறு திருத்தலங்களில் பல திருநாமங்களில் காட்சி அளித்து வருகிறாள்.
உலகாளும் அன்னை, புவனேஸ்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் சக்தி திருத்தலமே புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆலயம் ஆகும்.
தச மகா வித்யாவில் நான்காவது வித்யா புவனேஸ்வரியே ஆவாள். பிரபஞ்சத்தின் வடிவமாக விளங்குகிறாள்.
திருக்கோவில் வரலாறு
முற்காலத்தில் ஜட்ஜ் சுவாமிகளின் ஆஸ்ரமம் ஆக இந்த இடம் இருந்தது. அதன் பின் சாந்தானந்த சுவாமிகள் 1936-இல் ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானத்தை எழுப்பினார். அதன் பின்பு இங்கே புவனேஸ்வரி அம்மனை பிரதிட்டை செய்தார்.
ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம் என்றாலும் புவனேஸ்வரி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
அன்னை புவனேஸ்வரியும் சண்டிகா பரமேஸ்வரியின் வடிவமான அன்னை அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்கையும் ஒரே நேர்க்கோட்டில் எதிர் எதிரே சன்னதி கொண்டுள்ளனர் என்பது சிறப்பாகும்.
திருக்கோவில் அமைப்பு
கோவில் உள்ளே நுழைந்தும் ஜட்ஜ் சுவாமிகளின் சமாதி இருக்கும். இடது புறம் சென்றால் அன்னை புவனேஸ்வரி மற்றும் அஷ்டா தசபுஜ மகாலட்சுமி நேர் எதிர் சன்னதிகள்.
மாதா புவனேஸ்வரிக்கு முன் ஸ்ரீ சக்ர மகா மேரு பிரதிட்டை செய்துள்ளனர்.
கோவிலை சுற்றி வந்தால் பஞ்ச முக கணபதி, பஞ்ச முக ஆஞ்சநேயர், தன்வந்திரி, 18 சித்தர்கள், சிவன், 25 முக சதாசிவன், பொற்பனையான், சாஸ்தா, தண்டபானி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
அன்னை புவனேஸ்வரிக்கும் அஷ்டா தச புஜ மகாலட்சுமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடப்பது மிகவும் சிறப்பாகும்.
யாகம் முடிந்ததும் மழை!
இங்கே பெரிய யாக குண்டம் அமைந்துள்ளது. இங்கே வருடத்துக்கு ஒரு முறை மிகப்பெரிய சண்டி ஹோமம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் யாகம் முடிந்த பின் நல்ல மழை பொழிகிறது என்பது அதிசயமான உண்மை.
புவனம் ஆளும் புவனேஸ்வரி!
இந்த பிரபஞ்சத்தில் புவனேஸ்வரியின் உத்தரவின்றி ஒரு அணுவும் அசையாது.
இக்கோவிலில் அர்ச்சனை சீட்டோ அல்லது காணிக்கை உண்டியலோ கிடையாது. அமைதியாக அமர்ந்து அன்னையை எண்ணி தியானித்தால் போதும். தன்னை நம்பி வந்தவர்களை கைவிடாமல் காப்பாள் மாதா புவனேஸ்வரி.
அனைவரும் புதுக்கோட்டை சென்றால் தவறாமல் புவனேஸ்வரி அன்னையை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.
அமைவிடம்: புவனேஸ்வரி அம்மன் ஆலயம், புதுக்கோட்டை.
ஆடி மாத தரிசனம் தொடரும்…!