Home ஆன்மிகம் குழந்தை வரம் அருள்வாள் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி!

குழந்தை வரம் அருள்வாள் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி!

192
0
சுயம்பு நாக ஆதிபராசக்தி

சுயம்பு நாக ஆதிபராசக்தி: குழந்தை வரம் தரும் அம்மன். சுயம்பில் தானாக உருவான நாகம் . காவல் புரியும் அதர்வண பத்ரகாளி.

கடவுள் நமக்கு எத்தனையோ செல்வத்தை வழங்கினாலும் நம் வாழ்வில் மிக முக்கியமான செல்வம் குழந்தை செல்வமே ஆகும்.

“குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்”                                 –என்பார் திருவள்ளுவர்.

அப்படிப்பட்ட குழந்தை செல்வம் இல்லாமல் பலரும் இன்று தோஷத்தாலும், பலவித பிரச்சனையாலும், உடல் உபாதைகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய பிரச்சினைகள் தீர ஒரே வழி இறைவனிடத்தில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் வேண்டுதல் ஒன்றே ஆகும்.

இவ்வாறு மழலை செல்வம் இல்லாமல் அவதிப்படும் அடியவர்களுக்கு மழலை செல்வம் வழங்கி வாழ வைக்கும் அம்பிகை அருள்புரியும் சக்தி திருத்தலமே சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் எருமைப்பட்டி கொட்டாய்காரன்வளவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்பிகை ஆவாள்.

ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி ஆலய வரலாறு

சேலம் மாவட்டத்தில் உள்ள சக்தி திருத்தலங்கள் பல. அதில் ஒன்று தான் எடப்பாடிக்கு மிக அருகில் எருமைப்பட்டி கொட்டாய்காரன்வளவு கிராமத்தில் கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் ஆகும்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் சிறுவர்கள் ஒரு சுயம்பு கல்லை அம்மன் என்று கூறி வழிபட்டு வந்தனர். பின் அக்கல்லானது அங்கேயே நிலைக்கொண்டு ஆதிபராசக்தி என்ற திருநாமத்தில் ஊர் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

பின் சில காலத்தில் சுயம்பு கல்லில் தானாகவே நாக உருவம் தோன்றியது. தான் சுயம்பு நாக ஆதிபராசக்தி என்ற நாமத்தில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று அம்பிகை அருள் கூறினாள்.

அன்று முதல் இன்று வரை ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி என்ற திருநாமம் கொண்டு பக்தர்களின் குறைகளை போக்கி வருகிறாள் அம்பிகை.

சாதாரண குடிலில் அம்பிகை கம்பீரமாக சுயம்பு ரூபத்தில் காட்சி தருகிறாள். உற்சவர் திருமேனி நின்ற திருக்கோலத்தில் பாசம், அங்குசம் தாங்கி அபய வரத அஸ்தம் கொண்டு ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அம்பாள் காட்சி தருகிறாள்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஒன்று சேரந்த  ஆதிபராசக்தியாகி மகா திரிபுரசுந்தரியாகி பரதேவதையாக விளங்குகின்றாள் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்பிகை.

கோவிலில் விநாயகர், முருகன், சப்த கன்னிகள், நாக ராஜா, நாக கன்னி ஆகியோர் அம்பிகையின் பரிவார தெய்வங்களாக விளங்குகின்றனர்.

மேலும், ஆலயத்தின் காவல் தெய்வமாக ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி ஐந்து அடி உயரத்தில் கம்பீரமாக சிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள். பீடத்தில் யந்திர ரூபமாகவும் பிரத்யங்கிரா அம்பிகையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஆலயத்தில் செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, தசமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ராகு காலத்தில் பெண்கள் தீபம் ஏற்றி வழிப்படுகின்றனர்.

குழந்தை வரம் தருவாள் சுயம்பு நாக ஆதிபராசக்தி

சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயில் குழந்தை வரம் வேண்டி வருவோர்க்கு கற்பகவிருட்சமாக விளங்குகிறது.

இங்கே ஆண்டு தோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்  அம்மனிற்கு வளைக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தில் பலநூறு பக்தர்கள் வந்து மனமுருகி குழந்தை வரம் வேண்டுகின்றனர்.

அனைவருக்கும் அம்பிகைக்கு படைத்த நைவேத்தியம் மற்றும் ரஸ்தாலி வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உண்பவர்கள் விரைவில் குழந்தை வரம் கிடைக்கப்பெற்று இன்புற்று வருகின்றனர் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

ஒரே ஆண்டில் குழந்தை பிறக்கும் என்பது இங்கே குவியும் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் சத்தியமான உண்மையாகும். வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனிற்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர் பக்தர்கள்.

ஆடி மாத வளைக்காப்பு உற்சவத்தில் சீரும் சிறப்புமாக அன்னதானம் நடைபெற்று வருகின்றனது. கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் ஏவல், பில்லி, சூனியம், திருஷ்டி போன்ற தொல்லைகளால் அவதிப்படும் அன்பர்கள் இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவிக்கு நடைபெறும் “நிகும்பலா” யாகத்தில் கலந்து கொண்டு யாகத்தில் மிளகாய் வற்றலை சமர்பித்து எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது கண்கூடான உண்மை.

குழந்தை வரம்

பிரத்தியங்கிரா அம்பிகைக்கு அகல் தீபம், தேங்காய் தீபம், எழுமிச்சை தீபம், பூசணிக்காய் தீபம், மஞ்சள் கொம்பு மாலை என பல்வேறு வழிபாடு முறைகள் இங்கே நடைபெறுகின்றது.

குழந்தை வரம் வேண்டுவோர், திருமணத்தடை, நாக தோஷம், ராகு கேது தோஷம், சர்ப தோஷம் மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் இங்கே சென்று ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி மற்றும் அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி அருளினையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

ஆலய அமைவிடம்

சேலம் – எடப்பாடி சாலையில் கன்னதேரி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எருமைப்பட்டி கொட்டாய்காரன்வளவு ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி ஆலயம் அமைந்துள்ளது.

ஆலய தொடர்பிற்கு: திரு. நித்யானந்தம், Cell: 9095670302.

Previous articleசைவ முதலை பபியா இறைவனின் திருவடி சேர்ந்தது!
Next articleமாவொளி – இயற்கை மத்தாப்பு: இதுதான் ஒரிஜினல் தீபாவளி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here