தேப்பெருமாநல்லூர் ஆன்மீக அதிசயங்கள், மறுப்பிறவி இல்லாதவர்கள் மட்டுமே போக முடியும் அதிசயமான சிவன் கோவில், அனைத்து பரிவார தெய்வங்களும் ஆகம விதிப்படி இல்லாமல் மாறி அமைந்த திருக்கோவில், மறுப்பிறவியை தகர்க்கும் திருக்கோயில்.
உலகெங்கும் பரவியிருக்கும் ஆதி அந்தம் இல்லாத பரம் பொருளாகிய ஈசனின் திருக்கோவில்கள் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளன.
தமிழகத்தில் காவிரிக் கரையில் சோழ நாட்டில் சிவ பெருமானிற்கு மிக பிரம்மாண்டமான கோவில்கள் அமையப் பெற்றுள்ளன.
அப்படிப்பட்ட பசுமை மாறாத சோழ வளதேசத்தில் அமைந்த அதிசயமான கோவில் தான் தேப்பெருமாநல்லூர் வேதாந்த நாயகி உடனுறை விஸ்வநாத சுவாமி திருக்கோயில்.
தேப்பெருமாநல்லூர் தல வரலாறு
பிரளய காலம் வந்த போது உலகமெங்கும் நீரால் அழிந்து போன போது இத்திருத்தலம் மட்டும் தண்ணீர் சூழாமல் நிலைத்து நின்றது. இதனை கண்டு ஆச்சரியப்பட்டு பிரம்மன் விவரம் அறிய விநாயகரை நோக்கி தியானித்தார்.
விநாயகரும் அவர் முன் தோன்றி இத்தலம் மிகவும் புனிதமானது இங்கே ஈசன் எழுந்தருள உள்ளார். இங்கே நானும் அம்மை அப்பனும் எழுந்தருள்வோம் என்று கூறினார்.
மேலும் மறுப்பிறவி இல்லாத புனிதரால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்க இயலும் என்றார். பின் பிரம்மன் நீரால் மூழ்காத இத்திருக்கோவிலுக்கு வந்தார். இங்கே சிவபெருமான் ஜோதி லிங்கமாக காட்சி கொடுத்தார்.
விநாயகரும் அஷ்டதிக் பாலகர்களின் கபாலங்களை ஒட்டியாணமாக மாற்றி இடுப்பில் அணிந்து மனிதர்களை போல் கண்கள், நீண்ட கை விரல்கள் , கால் விரல்கள் கொண்டு கபால விநாயகர் ரூபத்தில் காட்சியளித்தார்.
அம்பிகை பிரளயத்தில் அழிந்த வேதங்களை உபதேசிக்கும் வண்ணம் வேதாந்த நாயகியாக காட்சியளித்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
வித்தியாசமான சன்னதிகள்
விஸ்வநாதர் கற்ப கிரஹம் தேன் மற்றும் சுண்ணாம்பு கலந்து கட்டப்பட்டுள்ளது. இறைவி வேறு எங்கும் இல்லாத வண்ணம் வலது காலை முன் வைத்து திருவாயை குவித்து வேதங்களை உபதேசிக்க வரும் வண்ணம் அமைந்துள்ளார்.
தட்சிணாமூர்த்தி வேறு எங்கும் இல்லாத வண்ணம் சனகாதி முனிவர்கள் இன்றி நந்தியின் மேல் அமர்ந்தவாரு உள்ளார். நந்தி இத்தல இறைவனை காண வரும் போது கால் இடறி விழுந்து வலது காது உள்ளே போனதால் வலது காது உள்ளே அழுந்திய படி காட்சி தருகிறார்.
கன்னி மூலையில் கபால கணபதி அருள்புரிகிறார். அபிஷேகத்தின் போது கபாலங்களை விநாயகரின் இடையில் காணலாம். வடமேற்கு கோஷ்டத்தில் திருமால் காட்சி தருகிறார். ஒரே இடத்தில் மகா மந்திர பைரவர், சாந்த பைரவர் என இருவரும் காட்சியளிக்கின்றனர்.
இரண்டு சண்டிகேஸ்வரர்கள் ஒரே இடத்தில் தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரருக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு திருக்கரத்துடன் விஷ்ணு துர்கையும், அம்பிகையின் கருவறைக்கு பின் வடக்கு கோஷ்டத்தில் எட்டு திருக்கரங்களுடன் துர்கையும் காட்சி தருகின்றனர்.
நவ கிரகங்கள் தங்களின் திசைகளை மாற்றி வெவ்வேறு திசைகளில் உள்ளனர். பைரவருக்கு அருகில் சனிபகவான் காக வாகனத்தில் காட்சி தருகிறார்.
இப்படி அனைத்து தெய்வங்களும் அகமவிதிக்கு அப்பாற்பட்டு வெவ்வேறு விதத்தில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.
திருக்கோவிலின் வரலாற்று சிறப்புகள்
மகரந்த முனிவருக்கு அகத்தியர் அளித்த சாபம் போக்கிய தலம். சனிபகவானை பைரவர் அழித்து பின் மீண்டும் சாந்த பைரவராக மாறி அருள்புரிந்த திருத்தலம்.
ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் நாகம் தலவிருட்சமான வில்வ மரத்திலிருந்து வில்வத்தை கொய்து சென்று இறைவனுக்கு அர்பணித்து பூஜிக்கும் திருத்தலம். தினமும் சூரியன் தன் கதிர்களை கொண்டு விஸ்வநாதரை பூஜிக்கும் திருத்தலம்.
நவராத்ரி காலத்தில் திருமால் சீர் கொடுத்து தனது தங்கையான அம்பிகையையும் மைத்துனரான ஈசனயும் அருகில் உள்ள தனது கோவிலுக்கு அழைத்து செல்லும் திருத்தலம். மறுப்பிறவி என்பதே இல்லாமல் ஆக்கும் ஒரே ஒரு திருத்தலம் இதுவே ஆகும்.
மறுப்பிறவியை போக்கும் விஸ்வநாதர்
“மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி”
என்று மணிவாசகர் பாடியதற்கு ஏற்ப இறைவன் இத்தலத்தில் இந்த மாயப்பிறவியில் இருந்து விடுதலை அளித்து சிவபதம் அடைய அருள்புரிகிறார்.
மேலும் எவர் ஒருவர் மறுப்பிறவி இல்லாத புனிதரோ அவர்களால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்க இயலும் என்பது உண்மையாகும்.
அனைவரும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் சென்று விஸ்வநாதரையும் வேதாந்த நாயகியையும் தரிசித்து மறுப்பிறவியற்று நற்கதி அடைவோம்.
Arumayana pathivu. Dev