Home ஆன்மிகம் செல்வவளம் பொழியும் சொர்ணாகர்ஷன பைரவர்

செல்வவளம் பொழியும் சொர்ணாகர்ஷன பைரவர்

193
0
அஷ்டமி பைரவர்

செல்வவளம் பொழியும் செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷன பைரவர். கும்பகோணத்தில் உள்ள ஒரே இடத்தில் அமைந்த அஷ்ட பைரவர் திருக்கோவில் சகல சம்பத்துகளும் அருளும் வழிபாடு.

நமது பாரத தேசத்தில் தொன்றுதொட்டு பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சைவ, வைணவ, சாக்த, கௌமார, கணாதிபத்ய, சௌரம் என அனைத்து சமயங்களிலும் பல்வேறு வழிபாடு முறைகள் செய்து வருகின்றோம்.

இவை அனைத்தும் எதற்கு என யோசித்து பார்த்தால் செல்வம், கல்வி, கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, வியாதி, வழக்கு, எதிரிகள் தொல்லை என்று ஒவ்வொருவரும் எதாவது ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றோம்.

இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் தீர நமது முன்னோர்கள் கூறிய சிறப்பானதும், எளிதானதுமான வழிபாடே பைரவர் வழிபாடு.

64 பைரவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு 64 சக்திகளாக யோகினிகள் உள்ளதாகவும் வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. அதிலும் சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஐஸ்வர்ய மலை பொழியக்கூடியது.

பைரவர் இல்லாத சிவன் கோவில் இருக்காது. அவரே சேத்திரபாலகர். கோவிலின் காவல் தெய்வமாக விளங்குகிறார். நமது வாழ்விற்கும் காவலாக இருக்கக்கூடியவரும் அவரே ஆவார்.

செம்பியவரம்பல் பைரவர் திருத்தலம்

செம்பியவரம்பல் பைரவர்

கோவில் நகரமாம் கும்பகோணத்தில் அய்யாவாடிக்கு மிக அருகில் திருவிசைநல்லூர் என்ற ஊரிலே அமைந்துள்ள பைரவ திருத்தலமே ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோவில்.

இங்கே அஷ்ட திசைகளிலும் அஷ்ட பைரவர் சூழ்ந்திருக்க நடுநாயகமாக ஸ்ரீ சொர்ண பைரவியை மடியில் அமர்த்தி ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் அருளாட்சி புரிந்து வருகின்றார்.

மூலஸ்தானத்தில் சொர்ணாகர்ஷன பைரவர் மடியில் ஆஜாமிளா தேவியை அணைத்தப்படி வலது மேற்கரத்தில் சொர்ணகலசமும், கீழ் கரத்தில் அபயமும் தாங்கி இடது மேற்கரத்தில் டமருகமும் கீழே அம்பிகையை அணைத்தும் இடதுகாலை மடித்து வலது காலை பத்மத்தின் மீது வைத்து திருக்காட்சி அருள்கிறார்.

இவரை சுற்றி வெளிப்புறத்தில் அசிதாங்கப்பைரவர், ருருப்பைரவர், சண்டப்பைரவர், பீக்ஷணப்பைரவர், உன்மத்தப்பைரவர், சம்ஹாரப்பைரவர், குரோதனப்பைரவர், கபாலப்பைரவர் என அஷ்ட பைரவர்களும் புடைசூழ்ந்துள்ளனர்.

ஸ்ரீ ஞானபிரசூராம்பிகா சமேத காலஹஸ்தீஸ்வரர் தனி சன்னதியில் காட்சிதருகின்றனர். இத்திருக்கோவில் பைரவ பீடம் என அழைக்கப்படுகிறது. தினந்தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

அஷ்டமி பைரவர் வழிபாடு

திதிகளில் பைரவருக்கு உரியதாக சொல்லப்படுவது அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி இன்னும் விசேடமான ஒன்று.

அஷ்டமி திதி நன்னாளில் பைரவரை சிகப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். செவ்வரளி மலர்களால் வழிபட சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

சுத்தமான நல்லெண்ணைய் ஊற்றி மண்ணினால் ஆன அகல் விளக்கில் பஞ்சுதிரியால் தீபம் ஏற்ற வேண்டும். புனுகு பூசி வழிபடலாம்.

துன்பங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி பெற  அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபாடு செய்வது மிகவும் பலன் அளிக்கும். குபேரசம்பத்து அருளும்.

இத்திருக்கோவிலில் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பாக யாக வேள்விகள் நடத்தப்படுகின்றது.

மேலும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு செய்வதினால் திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் தொல்லை, ராகு கேது தோஷம், சனி தோஷம், எதிரிகள் தொல்லை என அனைத்து துயரங்களும் நீங்கும்.

அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவாதிரை, பூசம், உத்திர நட்சத்திர தினங்களில் பைரவரை வழிபாடு செய்ய உகந்த தினங்கள் ஆகும்.

பைரவருக்கு உரிய மலர் செவ்வரளி, உரிய நைவேத்தியம் மிளகு சாதம், உரிய நிறம் சிகப்பு ஆகும். வடைமாலை சாற்றுவதால் நன்மை ஏற்படும். மல்லிகை மலர் சாத்துவது பாவமாகும்.

நாமும் கும்பகோணம் சென்று செம்பியவரம்பல் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறுவோம்.

கோவில் அமைவிடம்:

கும்பகோணம் அய்யாவாடி மற்றும் திருநாகேஸ்வரதிற்கு மிக அருகில் செம்பியவரம்பல் என்ற கிராமத்தில் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது.

Previous articleஉலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்
Next articleசைவ முதலை பபியா இறைவனின் திருவடி சேர்ந்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here