காளி பீடம்: 51 சக்தி பீடங்களில் காளி பீடம், காளியுடன் சிவன் ஆடிய தாண்டவம், காரைக்கால் அம்மையார்க்கு வழிகாட்டிய திருவாலங்காடு பத்ர காளி.
மண்ணில் மக்கள் நல்ல வண்ணம் வாழ அம்பிகை பராசக்தி பல்வேறு ரூபங்கள் கொண்டு துஷ்டர்களை சம்ஹாரம் செய்து நம்மை காத்து இரட்சித்து வருகிறாள்.
அவளுடைய கருணை அளவிடற்கரியது. ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு சிறப்பினை கொண்டது. காளி என்றாலே நம் நினைவில் வருவது உக்ர ரூபம் தான். ஆனால் நாம் அஞ்ச தேவையில்லை.
காளி துஷ்டர்களையும், அரக்கர்களையும் மட்டுமே கொன்று குவிப்பாள். தம் குழந்தைகளை தாயாய் இருந்து காப்பாள்.
நற்கதிக்கு வழி தெரியாது தடுமாறி கிடக்கும் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுபவள்.
அவளே காரைக்கால் அம்மையாருக்கும் சிவத்தை அடைய வழிகாட்டினாள். இன்றும் தடுமாறும் மனதிற்கு நற்கதி அடைய வழிகாட்டுபவளே “திருவாலங்காட்டு பத்ர காளி” ஆவள்.
திருவாலங்காட்டு காளி தலபுராணம்
இந்த ஊர் ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலங்காடு என்ற பெயர்ப் பெற்றது. பழையனூர் எனவும் இதற்கு பெயருண்டு. இங்கே சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ரத்ன சபை அமையப் பெற்றுள்ளது.
ஆனால் இங்கு சிவன் கோவில் கொள்வதற்கு முன்பே காளியே முன் வந்து அமர்ந்தாள். காளியானவள் சண்ட முண்டர்களையும், சும்ப நிசும்பர்களையும் அழித்து, இரத்த பீஜன் உதிரத்தை பருகியும் உக்கிரம் தீராமள் ஆலமரங்கள் நிறைந்த இக்காட்டிலே உலவி கொண்டிருந்தாள்.
அவளின் கோப அக்னி அனைவரையும் அச்சுறுத்தியது. இதனை கண்டு தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். காளியின் ஆவேசம் குறைய சிவன் காளி முன் தோன்றினார். நடனத்தில் சிறந்தவள் ஆன காளி சிவனை நடன போட்டிக்கு அழைத்தாள்.
போட்டியில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே இக்காட்டை ஆளலாம் என கூறினாள்.
இவருக்கும் நடனப்போட்டி நடக்க பிரம்மனும், விஷ்ணுவும், பூத கணங்களும் வாத்தியம் வாசித்தனர்.
சிவனை விட சிறப்பாக காளி நடனம் புரிந்தாள். காளியை அடக்க விஷ்ணு வண்டாக மாறி சிவனின் காதணியை கலட்டி விட்டார். அதனை தன் காலால் எடுத்து காதில் மாட்டினார் ஈசன். இதுவே “ஊர்த்துவ தாண்டவம்” ஆகும்.
காளியால் காலை தூக்க இயலாமல் வெட்கினாள். சிவனும் வெற்றி பெற்றார். காளியால் கால் தூக்க இயலாது என எண்ண வேண்டாம். தெய்வமே ஆனாலும் அவள் ஒரு பெண் அதனால் அனைவரின் முன்பும் காலை மேலே தூக்கி ஆட நாணம் ஏற்பட்டது.
எனவே தான் சிவன் வெற்றிப் பெற்றார். இருவருமே சமமானவர்கள் தான். காளிக்கு இணை சிவன், சிவனுக்கு இணை காளி என்பதற்காகவே இன்றும் திருவாலங்காட்டில் காவல் தெய்வமான காளியை தரிசித்து பின் சிவனை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.
ஊர் எல்லையிலே தனிக் கோவில் கொண்டு காவல் புரிகிறாள் ஆலங்காட்டு பத்ர காளி.
காரைக்கால் அம்மையாருக்கு வழிகாட்டிய காளி!
கையிலை மலையை தலையால் நடந்து சென்று சிவனை தரிசித்து. சிவனின் ஆனந்த தாண்டவம் காண வரம் கேட்டார் காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டில் வந்து தனது தாண்டவத்தை காணுமாறு ஈசன் வரமருளினார்.
சிவனை மட்டுமே சதா சர்வ காலமும் எண்ணிய அம்மையார்க்கு. “சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை” என்ற தத்துவத்தை உணர்த்தினாள் ஆலங்காட்டு எல்லையிலே கோவில் கொண்டுள்ள காளி தேவி.
பின் வழி தெரியாமல் இருந்த அம்மையார்க்கு திருவாலங்காட்டுக்கு வழி சொல்லியதும் இந்த காளி தான் எனவே தான் இவளுக்கு “வழிகாட்டிய காளி” என்கிற திருநாமம் உண்டு.
மேலும் வாழ்வில் நல்வழி அறியாமல் தடுமாறும் மாந்தர்களுக்கு நல்ல வழிகாட்டி வீடுபேறு பெற செய்யும் ஞானத்தை வழங்குகிறாள் பத்ர காளியம்மன்.
சக்தி பீடத்தில் காளி பீடம்
51 சக்தி பீடங்களில் காளி பீடமாக விளங்குகிறது இத்தலம். கருவறையில் அம்பிகை எட்டு திருக்கரங்களுடன் நடன கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிறிய கோவில் என்றாலும் நிறைய சிற்ப வேலைபாடுகளுடன் அழகுற்று அமைந்துள்ளது இத்தலம். பரமனுக்கே சக்தி தரும் பராசக்தியாக வீற்றிருக்கிறாள் பத்ர காளி.
நற்கதிக்கு வழி காட்டுவாள் பத்ர காளி!
வாழ்வில் ஏற்படும் துன்பம் துயரம் அனைத்தையும் அழித்து நற்கதி அடைய சிறந்த வழியை காட்டும் தயாபரியாக அன்னை ஆலங்காட்டு காளி விளங்குகின்றாள்.
திருவாலங்காட்டு இரத்தின சபை காண செல்பவர்கள் தவறாமல் அன்னை திருவாலங்காட்டு பத்ர காளியை தரிசிக்க தவறிவிட வேண்டாம்.
சிவத்தை அடைய வழிகாட்டும் சக்தியை அனைவரும் சென்று தரிசித்து எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்ந்து கடைநிலையில் வீடுபேறு பெற்று சிவபதம் அடைவோம்.
அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தனி வட்டம், திருவாலங்காடு – ஸ்ரீ பத்ர காளியம்மன் திருக்கோயில்.