காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாட்டில் உள்ள ரகசியம் என்ன? யார் இந்த காளி தேவி? மந்திர, தந்திர தான்த்ரீகவாதிகளின் தேவதையா? பூஜித்தால் என்ன கிடைக்கும்?
சக்தி வழிபாட்டின் முதன்மை வழிபாடு காளி வழிபாடே ஆகும். தசமகா வித்யாவில் முதன்மையான ஸ்வரூபம் காளி தேவியே ஆவாள். இவளின் ரூபம் கிருஷ்ண ரூபம் ஆகும்.
இவள் பார்க்க அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இவளே ஞானத்தின் பிறப்பிடம் ஆவாள் மாயையில் இருந்து விடுதலை அளிக்கும் தாயாய் விளங்குகிறாள்.
காளியின் தோற்றம்
காளி உக்கிரமான ரூபம் கொண்டதால் பலரும் அஞ்சுவர்.
பெரிய கண்கள், விரத்த சடை, கோரைப்பற்கள், ரத்தம் சொட்டும் நீண்ட நாக்கு, பதினெட்டு கரங்கள், முண்டமாலை, காலில் அசுரனை மிதித்த கோலம்.
பார்ப்பதற்கே மிரட்டுகின்ற தோற்றம். எவரும் கண்டு அஞ்சும் வண்ணம் வடிவம் கொண்டவள். உண்மையில் தாய்மையே வடிவானவள்.
இவளின் ரூபத்தை பின்வரும் தியான ஸ்லோகத்தில் காணலாம்
“ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி!”
இரத்த வர்ண ஆடை, ஜ்வாலையுடைய சடை, எட்டு கரங்கள், மூன்று கண்கள், கையில் சூலம், வேதாளம், கட்கம், டமருகம், கபாலம், கேடயம், அபய வரத அஸ்தம் தாங்கி காட்சி அளிக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொன்மையான காளி வழிபாடு
“காலா” என்ற சமஸ்கிருத வார்த்தையே காளி என்றானது. காலத்தை நிர்ணயம் செய்து வழிநடத்துபவளே காளி ஆவாள். மகா காலனின் பத்தினி இவளே ஆவாள்.
தமிழகத்தில் தொன்மையான வழிபாடு காளி ஆகும். ஐவகை நிலங்களில் பாலை நிலத்திற்கான தெய்வம் கொற்றவை (காளி) ஆவாள்.
இன்று திராவிடர்கள் என்று கூறி தெய்வ வழிபாட்டை பற்றி பிரித்து பேசும் பலரும் மறுக்க இயலாத வழிபாடு காளி வழிபாடு ஆகும்.
காளியின் ரூபம் ஒப்பற்ற வர்ணிக்க இயலாத ரூபம் ஆகும்.
இவள் பெண்மையின் “ஆற்றல், சக்தி, வீரம், ஆளுமை, தாய்மை, அன்பு, கோபம்” ஆகிய அனைத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளவள்.
செயங்கொண்டார் எழுதிய கலிக்கத்து பரணியில் காளியின் தோற்றம் பற்றி கூறபட்டுள்ளது.
தேவிமகாத்மியத்தில் இவளை ஆனந்தம் என்று கூறி உள்ளனர். நரம்பு மண்டலத்திற்கான தேவதையும் இவளே.
காளியை கண்டால் காலனும் அஞ்சி நடுங்குவான் என்று இவளின் சிறப்பை விவரிக்கின்றது.
காளி ஞானத்தின் வடிவமா?
காளி தேவி ஞான ரூபம் ஆவாள் ஆணவம், கன்மம், மாயை அழித்து அறிவு சுடரை அளிக்கும் சக்தியாவாள்.
தாரா, நீல சரஸ்வதி, சாமுண்டி, திகம்பரா, பைரவி ஆகிய வடிவங்களில் பூஜிக்க படுகிறாள். ஒப்பற்ற கலை ஞானத்தை அளிப்பவள்.
விக்ரமாதித்யன் தீவிர காளி பக்தன் ஆவான். உஜ்ஐயினி காளியாக அவருக்கு சர்வ வல்லமையையும் அளித்த மகா சக்தி ஆவாள்.
வழிகாட்டிய காளி என்ற நாமத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஆலங்காட்டிற்கு வழி சொன்னவள் இவளே ஆவாள்.
கவி காளி தாசர் இவளாளே கவித்துவம் அடைந்து சாகுந்தளம், மேக தூதம் போன்ற நூல்களை படைத்தார். காளியின் தாசர் ஆதலால் காளி தாசர் என பெயரும் கொண்டார்.
தட்சிணேஸ்வரத்தில் உள்ள தட்சிண காளியே இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஞானோபதேசம் செய்தாள்.
மகாகவி பாரதியும் சிறந்த காளி பக்தர் ஆவார். எனவே கவித்துவத்தில் சிறந்து விளங்கினார். அனைத்துமே காளி ரூபம் என்று கவிப் புனைந்தார்.
“ யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி, தாயே! என் மீதருள் புரிந்து காப்பாய்”
என்று பாரதி காளியிடம் வேண்டுகிறார்.
இப்படி மிகப்பெரிய கலை ஞானம் பெற்ற பலரும் காளியின் அருள் பெற்றவர்களே ஆவார்.
காளி உபாசனை
காளி எளிதில் நம் வசப்படுபவள். தடுக்கி விழுந்த குழந்தை அம்மா என்று அழைத்ததும் ஓடி வரும் தாய் போல “அம்மா” என்ற கூப்பிட்ட குரலிற்கு ஓடி வந்து காப்பவள்.
காளியை உபாசனை செய்பவருக்கு வாக்கு பலித்தம், கலை, ஞானம் , அறிவு, ஆளுமை, தேஜஸ், பலம், ஆரோக்கியம், செல்வம், வசீகரம், சித்தி, மோட்சம் என அனைத்தும் கைக்கூடும்.
மந்திர தந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் என்பது உண்மையானாலும். அதைவிட ஒப்பற்ற அன்பு மற்றும் பக்திக்கு கட்டுபட்டவள்.
என்றும் நல்லவைகளுக்கு மட்டுமே இறுதி வரை துணை நிற்பாள்.
தமிழகத்தில் காளி கோவில்கள்
தமிழகத்தில் பல பகுதிகளில் காளிக்கு கோவில்கள் உள்ளன. திருவாச்சூர் மதுர காளி, உறையூர் வெக்காளி, சமயபுரம் இருகே உஜ்ஜயினி மாகாளி, சிதம்பரம் தில்லை காளி, திருவாலங்காடு வழிகாட்டிய காளி, கோவையில் வனபத்ர காளி, சேலத்திலே பத்ர காளி, திருமங்கலம் பத்ர காளி, திருவக்கரை வக்கிரகாளி, சென்னை காளிகாம்பாள், மடப்புரம் பத்ர காளி என்று பல கோவில்கள் இவளுக்கு அமைந்துள்ளன.
காளியை துதிப்போம்
காளியை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். அவள் துஷ்டர்களை மட்டுமே அழிப்பவள். குழந்தை குணம் கொண்டவள். அன்னையாக அரவணைப்பவள்.
அன்னையாக அவளை துதித்து அவளின் அரவணைப்பிலே வாழ்ந்து சிறந்த ஞானம் பெற்று மோட்ச கதி அடைவோம்.