மகர சங்கராந்தி (Makar Sankranti), இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று. அது என்ன மகர சங்கராந்தி? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
காரணங்கள் அறியாமலே நம்மில் பலர் நிறைய காரியங்கள் மற்றவர்களைப் பார்த்து செய்து வருகிறோம்.
சங்கராந்தி என்றால் என்ன?
வடமொழியில் சங்கரமணம் என்றால் நகர துவங்குதல் என்று பொருள். சூரியன் தனது ராசி மண்டலத்தில் 12 ராசிகள் வழியாகப் பயணிக்கிறார்.
ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன. 12 ராசிகளின் பெயரிலேயே வடமொழியில் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்வதே சங்கராந்தி ஆகும்.
எத்தனை சங்கராந்திகள் உள்ளன?
நாம் முன்பு கூறியது போல் ராசி் மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சங்கராந்தி வீதம் மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.
உத்தராயண புண்ணிய காலத்தில் 6 சங்கராந்திகள் வரும் மற்றும் தட்சிணாயன காலத்தில் 6 சங்கராந்திகள் வரும். இந்த 12 சங்கராந்திகளும் 4 சங்கராந்தி பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
உத்தராயணம் & தட்சிணாயனம் என்பது என்ன?
உத்தரம் என்றால் வடக்கு. தட்சிணம் என்றால் தெற்கு. அயனம் என்றால் வழி என்பது பொருள்.
சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய வழியில் பயணிப்பது உத்தராயண காலம் ஆகும்.
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வழியில் பயணிப்பது தட்சிணாயன காலம் ஆகும்.
சங்கராந்தி வகைகள்
வருடத்திற்கு மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.
தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:
மகரம்-தை, கும்பம்-மாசி, மீனம்-பங்குனி, மேஷம்-சித்திரை, ரிஷபம்-வைகாசி, மிதுனம்-ஆனி.
தட்சிணாயன காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:
கடகம்-ஆடி, சிம்மம்-ஆவணி, கன்னி-புரட்டாசி, துலாம்-ஐப்பசி, விருட்சிகம்-கார்த்திகை, தனுசு-மார்கழி.
இந்த 12 சங்கராந்திகளும் 4 பிரிவுகளாக பிரிகின்றன:
• அயனி சங்கராந்தி
• விஸுவ சங்கராந்தி
• விஷணுபதி சங்கராந்தி
• ஷாட்சித முக சங்கராந்தி
அயனி சங்கராந்தி
மகரம் மற்றும் கடக சங்கராந்திகளை அயனி சங்கராந்திகள் என்பர். இது உத்தராயண மற்றும் தட்சிணாயன சங்கராந்திகள் இரண்டும் சேர்ந்த ஒன்று.
இவையிரண்டும் பருவ நிலை சார்ந்தவை ஆகும். உத்தராயண மற்றும் தட்சிணாயன காலத்தின் ஆரம்பமே அயனி சங்கராந்தி ஆகும்.
விஸுவ சங்கராந்தி
மேஷம் மற்றும் துலாம் சங்கராந்திகள் சேர்ந்ததே விஸுவ சங்கராந்தி ஆகும். இவை வசந்த சம்பத் மற்றும் சரத் சம்பத் எனப்படுகிறது.
விஷ்ணுபதி சங்கராந்தி
சிம்மம், கும்பம், ரிஷபம், விருட்சிகம் இந்த நான்கு சங்கராந்திகளும் விஷ்ணுபதி சங்கராந்திகள் எனப்படுகிறது.
பெரும்பாலான சுப நிகழ்ச்சிகள் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தான் நடைபெறுகின்றன.
ஷாட்சித முக சங்கராந்தி
மீனம், கன்னி, மிதுனம், தனுசு ஆகிய நான்கும் ஷாட்சித முக சங்கராந்திகள் எனப்படுகிறது.
மகர சங்கராந்தியின் சிறப்பு
சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர சங்கராந்தி ஆகும்.
சூரியன் 29 நாட்கள் 27 நிமிடங்கள் 16 நொடிகள் மகர ராசியில் பயணிப்பார். இது தை மாதத்தின் முதல் நாள் நிகழ்கிறது.
இது வெகு விமர்சையாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
தேவர்களுக்கு காலைப் பொழுதின் ஆரம்பம் மகர மாதம் ஆகும். ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாத இரவு என்பது தேவர்களின் ஒரு நாள் என்று நம்பப்படுகிறது.
காலை பொழுதின் துவக்கமே தை மாதம் ஆகும். எனவே தான் சூரியன் முதலான தேவர்களுக்கு இந்த ஆரம்ப நாளில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, லாவோஸ் போன்ற நாடுகளில் இந்த விழாவானது வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
2020-இல் மகர சங்கராந்தி
இந்த ஆண்டு சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி ஆனது ஜனவரி மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவு 02:22AM மணிக்கு நடைப்பெற்றுள்ளது.
இனியாவது விழாக்களை கொண்டாடுவது மட்டுமின்றி அந்த விழாக்களின் சிறப்பு மற்றும் காரணங்களை அறிந்து கொண்டாடுவோம்.