INDvsSL 2020: மலிங்கா பந்து வீச்சை மின்னல் வேகத்தில் தாக்கி இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை 201 என உயர்த்தினார் தாக்கூர்.
பந்துவீச்சு தேர்வு
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தவான்-ராகுல் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் நிலைத்து நின்று ஆடினர். 10 ஓவர்கள் முடிந்தும் இருவருடைய விக்கெட்டுகளையும் இலங்கை அணியினரால் வீழ்த்த முடியவில்லை.
தவான் 2018 ஆம் ஆண்டு போட்டிக்கு பிறகு T20 போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்மிற்கு திரும்பினார். ஆனால் அடுத்த சில பந்துகளிலேயே விக்கெட் இழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்
அதன் பிறகு வந்த சஞ்சு சாம்ஸன் முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட்டு மைதானத்தை அதிர வைத்தார். ஆனால் அடுத்த பந்திலேயே அவுட் ஆகி புஸ்வானமாக மாறினார்.
கே.எல். ராகுல் அரை சதம் கடந்த நிலையில் இறங்கி அடிக்க முற்பட்டு ஸிடெம்பிங்க் ஆனார். அவருடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐய்யரும் அவுட் ஆகினார்.
இவர்களைத் தொடர்ந்து முதல் பாலிலேயே வாஷிங்டன் சுந்தர் லட்டு கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடினார் கோலி.
மீண்டும் விக்கெட்
கோலி 32 ரன்கள் கடந்த நிலையில் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இதன்பிறகு போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என நினைத்த இலங்கைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
மின்னல் வேக தாக்குதல்
மனீஷ் பாண்டேவுடன் கை கோர்த்த தாக்கூர் மலிங்காவை நைய்யப்புடைத்தார். சிக்ஸர், ஃபோர் பறக்கவிட்டு மலிங்காவை கதிகலங்க வைத்தார்.
மறுபக்கம் பாண்டேவும் நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என அவர் பங்குக்கு பவுண்டரிகளை விளாசினார்.
தாக்கூர் மின்னல்வேக தாக்குதல் நடத்தி 8 பந்துக்கு 22 ரன்கள் குவித்தார். பாண்டே 18 பந்துக்கு 31 ரன்கள் குவித்தார்.
கோலி 11000 ரன்கள்
இந்தப் போட்டி மூலம் சர்வதேச அளவில் 11000 ரன்கள் குவித்த இரண்டாவது இந்தியப் கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தோனி முதலாவது இடத்தில் உள்ளார்.
உலக அளவில் 6வது இடத்தில் உள்ள விராட்கோலி அதிவிரைவாக 169 போட்டிகளில் 11000 ரன்களை கடந்து முதலிடம் பிடித்தார்.
இலங்கை பரிதாப தோல்வி
கத்துக்குட்டி அணியாக இந்தியா வந்துள்ள இலங்கை அணியினர் பரிதாபமாக டி20 போட்டியில் தோல்வியைத் தழுவினார்.
15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சைனி 3, சுந்தர் 2, தாக்கூர் 2, பும்ரா 1 என விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர் நாயகன் ஆட்ட நாயகன்
இந்த ஆட்டத்தில் 8 பந்துகளில் 22 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய தாக்கூர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
INDvsSL இரண்டு T20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட சைனி தொடர் நாயகன் விருதை வென்றார்.