இஸ்லாமை துறந்த பெண்ணைக் காப்பாற்றிய புன்னகை தேசம்
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற 18 வயதான சவுதி பெண் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டார்.
சவுதியில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார்.
தாய்லாந்து வழியாக விமானத்தில் சென்றுள்ளார். ஆனால் தாய்லாந்திலிருந்து விமானத்தில் அப்பெண்ணை அனுப்ப மறுத்துள்ளனர்.
குடியுரிமையும் இல்லை, அகதி என்ற அந்தஸ்தும் இல்லாததால் ஆஸ்திரேலியாவிற்குள் செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால், தாய்லாந்திலேயே முடங்கிவிட்டார். சவுதியும் அப்பெண்ணை அகதியாக அறிவிக்க முன்வரவில்லை. அவருடைய பெற்றோர்கள், அவரைச் சவுதிக்கே அழைத்துச்செல்ல தாய்லாந்து வந்துவிட்டனர்.
ஆனால் ரஹாஃப், பெற்றோரை பார்க்க விரும்பவில்லை. நான் சவுதிக்கு சென்றால் என்னை கொன்றுவிடுவார்கள் என மறுத்துவிட்டார்.
இதை அறிந்த ஐ.நா. சபை அவருக்கு உதவ முன்வந்தது. அவரை அகதி என அறிவித்துவிட்டது. சொந்த நாடு அகதியாக அறிவிக்காத பட்சத்தில் ஐ.நா. அறிவிக்க முடியும் என விளக்கம் அளித்துள்ளது.
தற்பொழுது ரஹாஃப்பை, ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது.
தாய்லாந்து காவல்துறை தலைமை அதிகாரி சுராசட் ஹக்பர்ன் இதுகுறித்து கூறியதாவது, அவரை நாங்கள் சிறப்பாக கவனித்துக்கொண்டுள்ளோம்.
அரச குடும்பத்தின் பாதுகாப்பில் அவர் இருக்கின்றார். அவரை நாங்கள் சாவதற்காக அவருடைய நாட்டிற்கு அனுப்பிவிட மாட்டோம்.
தாய்லாந்து புன்னகைகளின் தேசம் நாங்கள் யாரையும் இறப்பதற்காக அனுப்பமாட்டோம் என தெரிவித்தார்.