ஒத்த செருப்பு சைஸ் 7: ஒருவரே நடித்து, கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ள படம் என்று “கின்னஸ்” புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டது இந்தப் படம். தமிழ் சினிமாவின் மேலும் ஒரு மைல் கல்
ஒத்த செருப்பு சைஸ் 7 – புது வித முயற்சி!
சினிமாவை பொழுது போக்கு அம்சமாகத்தான் பலர் கருதுகின்றனர், வெகு சிலரே அதை கலைவடிவமாக மதித்து புதுமைகள் பல புகுத்துகின்றனர் .
உதாரணமாக 1940 களின் வாக்கில் வெளி வந்த “ அந்த நாள் “ என்கிற திரைப்படமே தமிழில் முதலில் வெளிவந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் .
“ராஜ ராஜ சோழன் “ தான் தமிழில் வெளிவந்த பயோ-ஸ்கோப் கலர் திரைப்படம். “விருமாண்டி” படத்தில் நேரடியாக (டப்பிங் இல்லாமல்) ஷூட்டிங் நடைபெறும் இடத்திலே, எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படியே வெளிவந்தது .
“கோச்சடையான்“ படம் தமிழில் வந்த முதல் மோசன் கேப்சுர் படம். ‘“2-0 “ முழு நீல 3டி படம். இப்படி அடுக்கிக்கொண்டே போகும் தமிழ் சினிமாவின் மேலும் ஒரு மைல் கல் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7.
ஆம் , ஒருவரே நடித்து , அவரே , கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி , தயாரித்துள்ள படம் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டது இந்தப் படம்.
படம் எப்படி?
தனி மனிதனாக நின்று விளையாடியுள்ளார் பார்த்திபன் அவர்கள். ஒற்றை ஆள்… ஒரு விளையாட்டு கிளப்பில் வேலைப் பார்க்கும் “ மாசிலாமணி “ என்கிற நடுத்தர வயது கதாபாத்திரம். அந்த நபரை மட்டுமே நாம் திரையில் காண முடியும்.
மீதமுள்ள அந்த நபரின் நோயுற்ற மகன், மனைவி, ரோஸி மேடம், டெபுடி கமிஷனர், இன்ஸ்பெக்டர், கோவக்கார போலீஸ் அதிகாரி, அய்யப்ப மாலை போட்ட காவலாளி, எம்.எல்.ஏ, அவரின் உதவியாளர், கமிஷனர், மனோதத்துவ மருத்துவர் போன்ற அனைத்துக் கதாபாத்திரங்களையும் நன்கு உணர முடிகிறது குரல்களை வைத்தே.
இப்படி ஒரு விஷயத்தை யோசிப்பதற்க்கே அசாத்திய திறன் வேண்டும். ஒரு கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்படும் ஒரு சாமானியன், சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிப்பது தான் கதை என்றாலும். அதை கூறிய விதம் , களம் முற்றிலும் புதிது.
மிக நன்றாகவே நடித்துள்ளார் பார்த்திபன்! படத்தை பார்பவர்களுக்கு சலிப்பு தட்டா வண்ணம் கேமிரா கோணங்கள், மெல்லிய நையாண்டி, சிறிது சுவாரசியம் ஆகியவற்றை அளித்துள்ளார்.
பின்னணி இசையே இப்படத்தின் முதுகு எலும்பு! திரு.சத்யா அவர்களின் இசைக்கோர்ப்பே இப்படத்தை இன்னும் தூக்கி நிறுத்துகிறது. திரு.சந்தோஷ் நாராயணன் ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.
இந்த படம் விருதுகளை வாங்கி குவித்தாலும், ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
இதையே ஒரு ஹாலிவுட்டில் செய்திருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம்…!
சா.ரா.