குரு 2007-ல் வெளிவந்த திரைப்படம். இந்தி, தமிழ் என இரு மொழிகளில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் பற்றி இன்று பார்ப்போம்.
பெயர் போடுவது முதலே புதுமை!
பத்திரிக்கை அச்சின் எழுத்துக்களே படத்தில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்தது.
படம் துவங்கியவுடன் பளீர் நிறத்துடன் ஒரு விளையாட்டு மைதானம், மூன்று முறை இருட்டு பிறகு வெளிச்சம் “ஒரே கனா என் வாழ்விலே“ என்கிற மெல்லிய குரலுடன் கதை பின்னோக்கி நகர்கிறது .
இலஞ்சி கிராமம்
படம் இலஞ்சி என்னும் கிராமத்தில் துவங்குகியது, வாத்தியாரின் மகனான “குருநாத் தேசிகன்“ பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைகின்றான். அதைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் “ இஸ்தான்புல் “ செல்ல ஆயத்தமாகிறான்.
(இது ஒரு மொழி மாற்றுப் படம் , புரியவே இல்லை, இன்னும் நிறைய எதிர் பார்த்தோம் போன்ற விமர்சனங்கள் ஏனோ என்னை பாதிக்கவே இல்லை)
தந்தையின் அதிருப்தி அவனை பாதிக்கவில்லை, அங்கு சென்று பெட்ரோல் விற்பனை செய்துகொண்டே வியாபாரத்தின் நுணுக்கங்களை கற்கின்றான் .
அவனுக்கு அங்கேயே ஊதிய உயர்வுடன் கூடிய பணி உயர்வு கிடைக்கிறது, குருவோ அதை உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊர் திரும்புகிறான்.
தொழில் துவங்க காசு தேடி அலைகிறான், அப்போது அவனின் நண்பன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து, அவளையே மணக்கிறான்.
திருமணத்தில் வந்த பணத்தை வைத்துக்கொண்டு தொழில் செய்ய மனைவி, மச்சானுடன் பம்பாய்க்கு ரயில் ஏறி பல கனவுகளைச் சுமந்து செல்கின்றான்.
ஆனால் பம்பாயோ அவனை விரட்டுகிறது! அவனின் நியாமான கோவம் அங்கு நாளிதழ் நடத்திவரும் நானாஜிக்கு பிடிக்க அவனுக்கு உதவுகிறார்.
பிறகு தடைகளை உடைத்து , தனக்கான ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறான் .
சில வருடங்களுக்கு பிறகு அவனின் நிறுவனங்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை ஏமாற்றியதாய் குருநாத் மீது பல வழக்குகள் தொடரப்படுகிறது, அவருக்கு பக்க வாதமும் ஏற்படுகிறது .
குருபாய்
இறுதியில் “குரு கூட மோதணும்னா, நீயும் குரு பாயா மாறனும்… ஆனா குருபாய் ஒருத்தன் தான்“ என்பதை செய்து காட்டி ஜெயிக்கின்றான் .
குருநாத் தேசிகன் என்கிற மிக கடினமான கதாபாத்திரத்திரத்திற்கு தக்க நியாயம் செய்துள்ளார் அபிஷேக் பச்சன்!
ஆரம்ப காட்சிகளில் துறுதுறுப்பு , மனைவியிடம் பரிவு , தொழில் போட்டிகளை சமாளிக்கும் சாதுரியம் , குற்றச்சாட்டுகளை எதிர் கொள்வது , இடது கை வழக்கம் , சிரிப்பு , குறிப்பாக அந்த இறுதிக்காட்சி நடிப்பு அபாரம் !
குருநாத்தின் மனைவியாக ஐஸ்வர்யா ராய் மிக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குரு அவர் வீட்டிற்கு வருகையில் “யாரு தரகரோ? ” என்று ஊஞ்சல் ஆடிக்கொண்டே கேட்கும் காட்சி, இறுதியில் “பாதி பார்ட்னர், அவர்கூட எங்க வேணாலும் போவேன் ஜெயிலுக்கும் தான்“ என்று கூறி அசத்துவார்.
நானா படேகர் சுதந்திர மணி பத்திரிக்கை ஆசிரியராக அசத்தி இருப்பார், சிறிது நேரமே வந்தாலும் மாதவன், வித்தியா பாலன் முத்திரை பதிந்துவிடுகின்றனர்.
கதையின் மற்றொரு நாயகன் ரஹ்மான்! அவர் இசை இப்படத்திற்கு அணு அணுவாக உயிர் ஊட்டியுள்ளது… குறிப்பாக அந்த குருபாய் தீம்! அவரின் குரலில் வரும் ஆருயிரே பாடல்.
“அவன் டை கட்ட சொன்னப்பவே வேலைய விட முடிவு செஞ்சுட்டேன் “
“ பூட்டு உங்களால போட முடியும்னா சாவி உங்ககிட்ட தான இருக்கனும் “
“ இல்லனு சொன்னா என்னோட காதுல விழாது “
போன்ற அழகம் பெருமாள் அவர்களின் வசனங்கள் படத்திற்கு பெரும் வலு!
இத்தகைய ஒரு படத்தை மணிரத்தினம் அவர்களைத் தவிர வேறு யாரால் இப்படி திறம்பட இயக்க இயலும்?
நேரம் , இடம் , நிறம் , காட்சி அமைப்பு , ஒலிக்கலவை , இசைகோர்ப்பு என அனைத்திலும் கும் என்று இருக்கும் படம்
“ குரு 2007″ A Maniratnam Film