இர்ஃபான் கான் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார் என்பதை அவரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புது தில்லி: பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானுக்கு நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது 2018-ம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், அவர் மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகரின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, “பெருங்குடல் தொற்று காரணமாக இர்ஃபான்கான் மும்பையின் கோகிலாபெனில் அனுமதிக்கப்பட்டார் என்பது உண்மைதான்.
அவர் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். அவரது வலிமையும் தைரியமும் அவருக்கு இதுவரை போராடவும் உதவியது.
நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அவரது மிகுந்த மன உறுதி மற்றும் அவரது அனைத்து நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளால், அவர் விரைவில் குணமடைவார்” என்று அவர் கூறினார்.
53 வயதான நடிகரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது, இதன் விளைவாக அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இவருடன் அவரது மனைவி சுதாபா மற்றும் மகன்களும் உள்ளனர்.
இர்பான்கானின் தாய் சயீதா பேகம் தனது 95 வயதில் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை காலை இறந்தார். மும்பையில் இருந்த இர்ஃபான், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது மறைந்த தாய்க்கு இறுதி மரியாதை செலுத்தினார் என்பதை ANI செய்தி நிறுவனம் தனது செய்தியில் வெளியிட்டிருந்தது.
நடிகருக்கு மார்ச் 2018-இல் நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது தெரிய வந்தது. ஒரு சில நாட்களுக்கு பின்னர், அவர் தனது சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
பிப்ரவரி 2019-இல் இந்தியா திரும்பிய அவர் தனது சுருக்கமான பயணத்தின் போது ஆங்ரேஸி மீடியத்தை படமாக்கினார் . சில மாதங்களுக்குப் பிறகு, சிகிச்சையைத் தொடர லண்டனுக்கு சென்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார். கரீனா கபூர் மற்றும் ராதிகா மதன் இணைந்து நடித்த ஆங்ரேஸி மீடியம் , நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இர்பான் கானின் முதல் படம்.
அதற்கு முன், துல்கர் சல்மான் மற்றும் மிதிலா பால்கர் இணைந்து நடித்து 2018-ஆம் ஆண்டு வெளிவந்த கார்வான் படத்தில் அவர் நடித்திருந்தார்.
இர்ஃபான்கான் திரைப்பட வரலாற்றில் மக்பூல், ஹாசில், பான் சிங் தோமர், ஹைதர் , பின்கு, தல்வார் மற்றும் அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே ஆகிய படங்கள் முக்கியமானவை.
சர்வதேச திரைப்படங்களாக தி நேம்சேக், லைஃப் ஆஃப் பை, இன்ஃபெர்னோ, ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் தி வாரியர் போன்றவற்றிலும் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.