Meena Corona Advice; கொரோனா: வீட்டிலேயே இருந்தா போர் அடிக்குதா? நடிகை மீனா அறிவுரை! கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருக்க முடியும்? போர் அடிக்கிறது என்று நினைப்பவர்களுக்கு மீனா புதுவிதமாக அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு நடிகை மீனா புதுவிதமாக அறிவுரை வழங்கியுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 3030 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை மீனா கொரோனா அறிவுரை (Meena Corona Advice) வழங்கியுள்ளார். இது குறித்து அவரது வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கோவிட்19 கொரோனா வைரஸ். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தாலும், நிறைய பேர் இதனை விளையாட்டுத்தனமாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதோடு, வீட்டை விட்டு வெளியில் சென்று ஜாலியாக சுற்றி வருகிறார்கள்.
இது போன்று அரசு சொல்வதை எல்லாம் கேட்காததால் தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. தினமும் 1000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோ தினமும் இறக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த கோவிட்19 வைரஸ் பாதித்துள்ளது. இதே நிலைமை நமக்கும் வேண்டுமா? வராமல் இருப்பதற்கு அரசு சொல்வதை கேட்க வேண்டும்.
எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருந்து டிவி பார்ப்பது…போர் அடிக்கிறது அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடுங்கள்.
படிப்பு சொல்லிக்கொடுங்கள். வீட்டு வேலை பாருங்கள். கிச்சனில் உதவி செய்யுங்கள். யோகா, தியானம், பொழுதுபோக்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது.
வீட்டிற்குள்ளே அமர்ந்து கொண்டு உலகத்தையே காப்பாற்றும் வாய்ப்பு நம் எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால்தான் உங்களது குடும்பம் ஜாக்கிரதையா, ஆரோக்கியமாக இருக்கும்.
தயவு செய்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.