Tamannaah: Online Rummy Game; தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு! ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அதன் விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமன்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், அண்மையில், தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லையில் ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக அதை விளையாடும் இளைஞர்கள் அதன் பிறகு அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது.
தமன்னா மற்றும் விராட் கோலி போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் செய்து, இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.
ரம்மி விளையாட்டு போன்ற ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி அதனை திருப்ப கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி கட்ட முடியாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.
இதற்கு முன்னதாக ப்ளூவேல் கேம் மூலமாக மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக அந்த விளையாட்டை தடை செய்தது. இதனை சுட்டிக்காட்டிய சூரியபிரகாசம், ஆன்லைன் சூதாட்டங்கள் ப்ளூவேல் கேமை விட மிகவும் ஆபத்தானது.
ஆதலால், இதில் உடனடியாக தலையில், ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு, இந்த விளையாட்டுகளை தடை விதிப்பதோடு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்துக் கொடுக்கும் தமன்னா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் நிலையில், விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.