Home சினிமா கோலிவுட் Joker songs: 2016 ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் பாடல்களை பற்றிய பதிவு!

Joker songs: 2016 ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் பாடல்களை பற்றிய பதிவு!

344
0
ஜோக்கர் பட பாடலின் மாயம்!
Joker songs: 2016 ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் பாடல்களை பற்றிய பதிவு!
பல மாதங்களாக சோஷியல் மீடியாக்களில் ஜோக்கர் பட பாடல்களை பற்றிய எந்த வித பதிவையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை ஜோக்கர் பட பாடல்கள் பெரும்பான்மையான மக்களை போய் சேரவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் அப்பாடல்களை மக்கள் கடந்திருப்பார்கள் அல்லது அப்பாடல்களை பற்றி பேசுவதை
குறைத்திருப்பார்கள் என எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டேன். இருப்பினும் அப்பாடல்களை பற்றிய ஒரு பதிவை பதிப்போம் என்று தோன்றியதன் விளைவுதான் இந்த பதிவு. ஒரு இரசிகனாக மட்டுமே இப்பதிவு.
2016-ல் வெளியாகிய திரைப்படம், ஜோக்கர். குக்கூ திரைப்பட இயக்குனர் இராஜு முருகனால் இயக்கப்பட்ட திரைப்படம். மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ‘ஷான் ரோல்டன்‘. முண்டாசுப்பட்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, பவர்பாண்டி, வாயை மூடி பேசவும், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களுக்கும் ஷான் ரோல்டன் அவர்கள் இசைையமத்திருக்கிறார்.
ஜோக்கர் திரைப்படத்தின் திரைக்கதை வித்தியாசமாகத்தான் இருந்தது. அதற்கு பக்கபலமாக ஷான் அவர்களின் இசையும் படத்தின் பாடல்களும் அமைந்தது. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம்.
ஓல ஓல குடிசையில..;
‘ஓல ஓல குடிசையில..’ என்று ஆரம்பிக்கும் பாடலை முருகவேல் என்பவரும் கார்த்திகா வைத்யநாதன் என்பவரும் பாடியுள்ளனர்.அண்ணன் யுகபாரதி வரிகளில் பாடல் தன் செழுமையை ஏற்றிக்கொண்டே போகிறது. வரிகளுக்கு ஏற்ப திரைப்படத்தில் காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஆறே காய்ந்தாலும் அன்புல நீ நீராடு‘ என்ற ஒற்றை வரியிலேயே யுகபாரதி அண்ணன் நம்மை பாடலுக்குள் ஈர்த்து உட்காற வைத்து விடுகிறார். ஷான் அவர்களின் இசை, பாடலுக்குள் உட்கார்ந்திருக்கும் நம்மை மெல்ல ரசித்து அன்புடன் புன்னகைக்க வைக்கிறது.
கூடிக்கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே
ஏறு வெயில போல
சந்தோஷம் கூடுதே
என்ற வரிகள் வாழ்வின் அன்பை பேச,
மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்டப்புள்ள
ஒன்னா நீயும் பெத்துதந்தா
மருத்துவச்சி
Bill-லு மிச்சம்
வறுமையை இப்படியும் சொல்லலாமா என்றே தோன்றியது இந்த வரிகளை கேட்டப்பின்.
பெற்றெடுத்த பிள்ளைகளை
இரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கீலிஷு பேச வைச்சு
ஏரோப்பிளேனில் ஏத்தனுமே
எனும ஆசையையும் தெளிக்கிறார், யுகபாரதி அவர்கள்.
ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா ?!
இந்த வரி நம் அனைவருக்குமான கேள்வியாகவும் ஆசையாகவும் அமைகிறது.
ஜாஸ்மினு...
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை இப்பாடல் பெற்றிருக்கிறது. சுந்தர் அய்யர் என்பவர் இப்பாடலை பாடியிருக்கிறார். எளிமையின் தீவிரம் போல அழகியலும் ஆபத்தும் இல்லை என்பார்கள். அதற்கேற்றவாறே எளிமையில் அழகியலை ஊற்றிருக்கும் இப்பாடல். வரிகளும் சரி, இசையும் சரி மிக மிக எளிமையாக அமைந்திருக்கும். முக்கியமாக எந்த வித மிகைப்படுத்துலும் இல்லாமல் காதல் பாடல் வருவது என்பது அரிதிலும் அரிது. அந்த அரிய சம்பவமாக இப்பாடலும் இருக்கும்.
கீழ்வரும் வரிகளே அதற்கு சாட்சி.
கழுத்தோரம் தேம்பலிருக்கு
உன் காலெல்லாம் பித்த வெடிப்பு
கழுவாத மூஞ்சு என்ன
உன் அழகால ஏன்டி கொன்ன
உன் எத்துப்பல்லு
நித்திரைய கொல்லுதடி
கல்யாணத்துல
ஃபிளக்ஸ் பேனரு பூரா
நாம சேர்ந்து போஸு கொடுத்தோம்
கலர் வீடியோவும் எடுத்தோம்
ஃப்ர்ஸ்ட் நைட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சு
நீ என்ன பார்த்து கொழைஞ்சு
அந்த கனவுப்போச்சு கலைஞ்சு.
செல்லம்மா…;
பெருமாள் என்பவரும், ஷான் ரோல்டனும், லலிதா சுதா என்பவரும் பாடியுள்ளனர். ஹிந்தியிலும் தமழிலும் மாறி மாறி இப்பாடல் ஒலிக்கிறது. இப்பாடலில் ஒவ்வொரு முறையும் லலிதா சுதா அவர்களின் குரல் ஒலிக்கும்போது சிலிர்க்கிற உணர்வு வருகிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை ஆனால் அந்த குரலிலும், அந்த குரல் பாடும் வரிகளும் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. இப்பாடலுக்கு வரிகளை எழுதியவர் இரமேஷ் வைத்யா .
சின்னாத்து மண்ணே எம் பொன்னே என்ற வரியில் தான் அந்த குரல் நம்மை ஆட்டிவைக்க ஆரம்பிக்கிறது. லலிதா சுதா அவர்களின் குரல் இப்பாடலில் ஒரு மீப்பெறும் துயரத்தையும், ப்ரியத்தையும் சுமந்தவாறே பாடல் முழுக்க வரிகளும் குரல்களும் இசையும் நிகழ்கிறது.
நட்ட நடு வெய்யிலுல
துட்ட முனி பொட்டலுல
குட்டி ஈடும் ஆட்டக்கண்டா
உன் நெனப்பு
வெள்ளிதல தூக்கையில
நெட்ட பானை சத்தத்துல
துள்ளி வந்து தீண்டுதடி
உன் சிரிப்பு
பஞ்சநீல நெடுவானம்
மேகமா நெறையுது
உன் முகத்த சிதையாம
வேகமா வரையுது
போன்ற கதை மாந்தர்களின் வாழ்வியலை சார்ந்த வரிகள் முழுக்க இப்பாடலை ஆக்கிரமித்திருக்கிறது.
சேர்ந்திருந்து பிறை பார்த்த
இராத்திரி விடியல
செல்லம்மா என் செல்லம்மா என்று பாடல் முடிவடையும்போது துயர் ஏறுகிறது.
என்னங்க சார் உங்க சட்டம்..:
இது பாடலின் ஆரம்ப வரி. நான்கு வருடம் முன்பு வெளியான பாடல்  தற்போதைய சூழலுக்கும் பொருந்துகிறது என்பதை வியப்பாக பார்ப்பதா? இல்லை இன்னும் அப்படியான நிலைதான் அதிகாரத்தில் நீள்கிறது என்று துன்பப்படவா என்பது தெரியவில்லை. இப்பாடல் முழுவதும் அரசை நோக்கி கேள்வி கேட்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் சூழலுக்கேற்பவே இது நிகழ்ந்திருந்தாலும், ரியாலிட்டியையும் இது பிரதிபலிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
நூறு கோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப்போற நீங்க
உழலோட டீலரு
ரேஷன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போறப்போக்க பார்த்தா
தேறாதுங்க முடிவுல
என்ற வரிகள் ஒரு சிறிய துளி மட்டுமே பாடலில் இருக்கும் மற்ற வரிகள் இன்னும் வீரியத்துடன் அடிப்படை கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும்.
Halla bol(உரக்கப்பேசு)..;
என் கனாவும்
உன் கனாவும்
ஒன்றுதான்
நம் இரவுகள்
விடியுமென்றுதான்
என்ற வரிகளுடன் ஆரம்பித்து கல்யாணி அவர்களின் குரலிலும் ஷான் அவர்களின் குரலிலும் ஒரு வீரியத்திற்கான பாடலாய் அமைகிறது.
ஒருவர் விழுந்தால்
இருவர் முளைக்கிறோம்
கேள்வி கேட்க
உன்னையும் அழைக்கிறோம்
போன்ற யுகபாரதி அவர்களின் வரிகள் பாடலின் வீரியத்தை அதிகரிக்கிறது.
Previous article90களில் பிறந்த காவலர், திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை முயற்சி: மும்பை
Next articleஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here