Sivaji Ganesan Death Anniversary; நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் 19 ஆவது ஆண்டு நினைவு தினம்! காலம் காலமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக போற்றப்படும் சிவாஜி கணேசனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சிவாஜி கணேசனின் 19ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
சின்னயா மன்ராயர் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4ஆவது மகனாக பிறந்தவர் சிவாஜி கணேசன். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி.
சிவாஜி கணேசனின் மனைவி கமலா. இவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி மற்றும் தேன்மொழி என்ற ஒரு மகள்களும் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர், மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.
அவரது நடிப்பைக் கண்டு வியந்த தந்தை பெரியார் அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், 9 தெலுங்கு படங்களிலும், 2 ஹிந்தி படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
நல்ல குரல்வளம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, நடிப்புத் திறமை ஆகியவை இவரின் சிறப்பம்சம்.
நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் பேசிய எங்களோடு வயலுக்கு வந்தாயா, நாட்டு நட்டாயா, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா என்றெல்லாம் அவரது வசனம் இன்றும் மக்களால் பேசப்படுகிறது.
மனோகரா, கர்ணன், ராஜ ராஜா சோழன் ஆகியவை வசனத்திற்கு பெயர் பெற்ற படங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்று தேசத்தலைவர்களின் கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
அதோடு மட்டுமல்லாமல், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் கந்தன் கருணை, திருமால் பெருமை என்று கடவுள்களின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழப் பெற்றவர்.
பாவ மன்னிப்பு, பாச மலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பலே பாண்டியா, பார் மகளே பார், பழநி, பச்சை விளக்கு, பாரத விலாஸ்,
புதிய பறவை, தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்று ஏராளமான படங்களில் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய இளம் நடிகர், நடிகைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர். சிவாஜி கணேசனுடன் இணைந்து சத்யராஜ், பாண்டியராஜன், விஜய், கமல் ஹாசன், ரஜினிகாந்த் என்று மாஸ் நடிகர்கள் நடித்துள்ளனர்.
சிவாஜி கணேசன் கலைமாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன், செவாலியர் விருது, தாதாசாகேப் பால்கே விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது.
இதையடுத்து, சென்னை அடையாறில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது. இன்று அவரது 19 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.