MK Arjunan Passed Away; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் மரணம்! மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் நேற்று காலமானார்.
கேரளாவில் பிறந்து பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா விடுதியில் வளர்ந்தவர் இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன். இசை மீது இருந்த ஆர்வத்தால், அங்கேயே இசையும் கற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் ஜி தேவராஜிடம் உதவியாளராக பணியில் சேர்ந்தார். தேவராஜ் இசையமைத்த பல படங்களுக்கு அர்ஜூனன் தான் ஹார்மோனியம் வாசித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 1968 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கறுத்த பொர்ணமி (Karutha Pournami) என்ற மலையாள படத்தின் மூலம் அர்ஜூனன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் 218 மலையாள படங்களில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பயானகம் (Bhayanakam) என்ற படத்துக்காக கேரள அரசு வழங்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான 48ஆவது கேரள மாநில திரைப்பட விருது பெற்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.ஷேகர், அர்ஜூனன் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதன் முதலில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பையும் இவரே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எம்.கே.அர்ஜூனன் (84) உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அர்ஜூனன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
என் குழந்தை பருவத்தில் எனக்கு அளித்த அன்பையும், ஊக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். உங்களது எண்ணிலடங்கா மெல்லிசை பாடல்கள் உங்களது நித்திய மரபுக்கு ஒரு சான்று.
எம்.கே.அர்ஜூனன் மாஸ்டர் நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.