Manikandan R Achari; பேட்ட நடிகருக்கு எளிமையான முறையில் திருமணம்: காசை மிச்சம் செய்து கொரோனா நிதியுதவி! பேட்ட படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் ஆர் ஆச்சாரிக்கு இன்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்த நடிகர் ஆர் அச்சாரிக்கு இன்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கம்மட்டிபாடம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மணிகண்டன் ஆர் ஆச்சாரி.
இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டு அழைப்புதழும் அடிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இதன் காரணமாக, நடிகர் மணிகண்டன் மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நாளை ஞாயிற்றுக்கிழமை தனது திருமணம் நடக்க இருக்கிறது. இதை நாங்கள் மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். வீட்டிலிருந்தபடியே உங்களது ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மணிகண்டன் திருமணம் திட்டமிட்டபடி நேற்று நடந்தது. மிகவும் எளிமையாக நடந்ததால், பணமும் அதிகளவில் மிச்சமாகியுள்ளது.
தனது திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தை கேரளா முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
ஆம், திருமணம் நடந்து முடிந்த உடனேயே எம்.எல்.ஏவான சுவராஜிடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.