Vairamuthu; தூணிலுமிருப்பது துரும்பிலுமிருப்பது கடவுளா? கொரோனாவா? கவிஞர் வைரமுத்து கவிதை! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கொரோனா பற்றி கவிதை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஞாலமளந்த ஞானிகளும்
சொல்பழுத்த கவிகளும்
சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்
கொரோனா சொன்னதும்
குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.
உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்
இந்தத் தொண்டைக்குழி நண்டுக்கு
நுரையீரல்தான் நொறுக்குத் தீனி
அகிலத்தை வியாபித்திருக்கும் இந்தத்
தட்டுக்கெட்ட கிருமியின்
ஒட்டுமொத்த எடையே
ஒன்றரை கிராம்தான்
இந்த ஒன்றரை கிராம்
உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்
உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!
சாலைகள் போயின வெறிச்சோடி
போக்குவரத்து நெரிசல்
மூச்சுக் குழாய்களில்
தூணிலுமிருப்பது
துரும்பிலுமிருப்பது
கடவுளா? கொரோனாவா?
இந்த சர்வதேச சர்வாதிகாரியை
வைவதா? வாழ்த்துவதா?
தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்த
நெல்லிக்காய் மனிதர்கள் இன்று
நேர்கோட்டு வரிசையில்
சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை
இன்று வட்டத்துக்குள்
உண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்று
உண்ணு முன்னே
புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை
இன்றுதான்
முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது
மாதமெல்லாம் சூதகமான
கங்கை மங்கை
அழுக்குத் தீரக் குளித்து
அலைக் கூந்தல் உலர்த்தி
நுரைப்பூக்கள் சூடிக்
கண்சிமிட்டுகின்றாள்
கண்ணாடி ஆடைகட்டி.
குஜராத்திக் கிழவனின்
அகிம்சைக்கு மூடாத மதுக்கதவு
கொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே!
ஆனாலும்
அடித்தட்டு மக்களின்
அடிவயிற்றிலடிப்பதால்
இது முதலாளித்துவக் கிருமி
என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.