Home ஆன்மிகம் பேசாத குழந்தைகளை பேச வைக்கும் நிசும்பசூதனி என்கின்ற அம்பாயிரம்மன்!

பேசாத குழந்தைகளை பேச வைக்கும் நிசும்பசூதனி என்கின்ற அம்பாயிரம்மன்!

0
425
நிசும்பசூதனி என்கின்ற அம்பாயிரம்மன்

நிசும்பசூதனி: நிசும்பசூதனியின் சிறப்புகள், அம்பாயிரம்மன் என்ற திருநாமம் கொண்ட நிசும்பசூதனி, அம்பாயிரம்மன் கோவில் சிறப்புகள்.

யார் இந்த நிசும்பசூதனி?

நிசும்பசூதனி என்கின்ற பெயரை நாம் உச்சரிக்காமல் சோழர்களின் வரலாற்றை அறிய இயலாது. சோழர்களின் வெற்றிக்கான தெய்வமே நிசும்பசூதனி ஆவாள்.

சும்பன் நிசும்பன் என்ற அரக்கர்களை துவம்சம் செய்த அம்பிகையே நிசும்பசூதனி என்கின்ற துர்கையாவாள். எட்டு திருகரங்களுடன் அரக்கனை காலில் மிதித்து அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருபவள்.

அம்பாயிரம்மன் வரலாறு:

வானகோவரையர் என்கிற குறுநில மன்னர் ஆண்ட மகத நாட்டின் சில பகுதியே சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் ஆகும். இவர் சோழ பேரரசின் கீழ் ஆட்சி புரிந்த குறுநில மன்னர் ஆவார். மேலும் சோழ படைத்தளபதியாகவும் விளங்கினார்.

ஆறகழூர் என்கின்ற இப்பகுதியில் வசித்து வந்த குயவர்கள் மண்பாண்டம் செய்ய மண்ணை வசிஷ்ட நதிகரையில் இருந்து எடுத்து வருவது வழக்கம்.

அவ்வாறு ஒரு நாள் குயவர்கள் நதிக்கரையில் இருந்து மண் எடுக்க மண்ணை பெயர்த்த போது எடுக்க இயலவில்லை. கோடாரியால் வெட்டியதும் உதிரம் பீரிட்டு வந்தது. இதனால் அதிர்ந்த மக்கள் மன்னரிடம் தெரிவித்து அப்பகுதியை தோண்டிய போது அம்பிகையின் சிலை கிடைத்தது.

அதன் பின் நிசும்பசூதனி தேவிக்கு தனியாக ஒரு கோவில் கட்டி போர் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட துவங்கினர்.

போரில் அரக்கர்களை ஆயிரம் அம்புகளை செலுத்தி கொன்று குவித்ததால் “அம்பாயிரம்மன் “ என்கின்ற திருநாமம் கொண்டாள்.

இங்கே ஆயிரம் எருமைகள் அம்பிகைக்கு பலி கொடுத்தாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்றளவும் திருவிழாவில் எருமை பலி கோவிலில் நடக்கிறது.

மேலும் நவகண்டம் தரும் நடுகல் சிற்பங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளதன் மூலம் இக்கோவிலின் தொன்மையை அறியமுடியும்.

பேச்சு மணி கொடுத்தால் ஆட்டு மணி தருகிறேன்!

இக்கோவிலில் சரியாக பேச்சு வராத குழந்தைகளுக்கு வேண்டுதல் வைக்கின்றனர். “பேச்சு மணி கொடுத்தால் ஆட்டு மணி தருகிறேன்” என்று அம்மனிடம் வேண்டி கொள்கின்றனர்.

குழந்தைகள் பேசி விட்டால் மணியை வாங்கி கோவிலில் கட்டுகின்றனர்.
குழந்தை இல்லாதவர்களும் வேண்டி கொண்டு குழந்தை வரம் கிடைத்த பின் அம்பாயிரம், அம்பாயி என்ற பெயரையே குழந்தைக்கு வைக்கின்றனர்.

இங்கே இரட்டை விநாயகர் சந்நதி ராகு கேது பரிகார தலமாக விளங்குகின்றது.மேலும் காவல் தெய்வங்களான வால் முனி, சடாமுனி, முத்தையன், கருப்பையா, வேங்கையன், ஆகாய துறைமுனி ஆகியோரும், சப்த கன்னியரும் உள்ளனர்.

நீதி பிராத்தனை:

நீதி கிடைக்காமல் துயரப்படுவர்கள், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றவர்கள், பகைவர்களினால் ஏற்படும் இன்னல்களுக்கு இங்கே திரிசூலம் வாங்கி தலைகீழாய் குத்து செல்கின்றனர்.

தங்களுக்கான நீதி கிடைத்ததும் திரிசூலத்தை நேராக குத்தி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

விபத்தால் இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் சிற்பத்தை ஒரு கல்லில் வடித்து வளாகத்தில் வைக்கின்றனர்.

பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு இராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது நற்பலன்களை வழங்கும்.

அனைவரும் ஆறகழூர் சென்று அம்பாயிரம்மனை தரிசித்து நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

தரிசன நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.

அமைவிடம்: சேலம் – ஆறகழூர் (52 கி.மீ. ) மற்றும் ஆத்தூர் – ஆறகழூர் (23 கி.மீ ) தொலைவில் உள்ளது.

யார் அந்த நிசும்பசூதனி ? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here