Dhivya Duraisamy; ஜெய்க்கு ஜோடியான சின்னத்திரை நடிகை! நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படம் ஒன்றில் சின்னத்திரை நடிகை திவ்யா துரைசாமி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த சின்னத்திரை நடிகை திவ்யா துரைசாமி, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர், நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் ஆகியோர் சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் கலக்கியவர்கள்.
இதே போன்று பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், மற்றொரு நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமிக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், ஷில்பா மஞ்சுநாத்தின் தோழியாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது ஜெய் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய ரோலில் இயக்குநர் பாக்யராஜூம் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கும் மற்றொரு படத்திலும் திவ்யா துரைசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.