Soori Autograph; போலீசாரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சூரி: வைரலாகும் புகைப்படங்கள்! திருவல்லிக்கேணியில் உள்ள டி1 காவல்நிலையத்துக்கு சென்ற சூரி போலீசாரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
இரவு, பகலாக பணியாற்றி வரும் போலீசாரிடம் காமெடி நடிகர் சூரி ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் என அனைவரும் இரவு பகல் பார்க்காமல், தங்களது உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் கொரோனா பரவி வரும் நிலையில், அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தான் உண்மையில் ரியல் ஹீரோஸ். அவர்களை நேரில் சென்று பாராட்டு தெரிவித்ததோடு, அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டு வாங்கியுள்ளார்.
ஆம், சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள டி1 காவல்நிலையத்திற்கு சென்ற அவர் போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு தங்களது உயிரையும் பணையம் வைத்து காவல் துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
நடமாடும் தெய்வமாகவும், காக்கிச்சட்டை அணிந்த அய்யனாராகவும் காவல் துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள்.
அப்படியிருந்தும், காவல்துறையினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இதுவரை 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கிறார்கள்.
வழக்கமாக மாஸ் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரிடம் தான் ஆட்டோகிராஃப் வாங்குவோம்.
ஆனால், உண்மையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் இவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
இவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.