FEFSI Workers; தொழிலாளர்களுக்காக ஓடோடி வந்த சூர்யா, கார்த்தி, சிவகுமார்! கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருக்கும் சினிமா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிவகுமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடு நடுங்கி வருகிறது. சீனாவில் தொடங்கி 100க்கும் அதிகமான உலக நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டன.
இதன் காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், அனைத்து தொலைக்காட்சி மற்றும் அதன் உரிமையாளர்கள் என்று பலருக்கும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு வேண்டுகோள் வைத்தார்.
வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.
10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட ரூ.2 கோடி ஆகிறது.
கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே. செல்வமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதலாவதாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ஓடோடி வந்துள்ளனர்.
ஆம், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், சிவகுமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
சேலம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மூட்டை அரிசியை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் பார்த்திபன் 25 கிலோ கொண்ட 250 அரிசி மூட்டை வழங்கியுள்ளார். ஜெகன் ரூ.5000, ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் ரூ.17,000, இயக்குநரும், நடிகருமான மனோபாலா அரிசி மூட்டையும் வழங்கியுள்ளனர்.