Vani Bhojan Lockup Movie; ஓடிடியில் வெளிவரும் வாணி போஜன் படம்! ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது படங்களைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள லாக்கப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்த லாக்கப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் லாக்கப்.
மேலும், இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஷ்வேத் புரோடக்ஷன் ஹவுஸ் சார்பில் நிதின் சத்யா தயாரித்துள்ளார்.
ஆரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக நேரடியாக இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வரும் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் லாக்கப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை.
இதற்கு முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் படங்களைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் டேனி படமும், யோகி பாபுவின் காக்டெய்ல் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்டெய்ல் வரும் ஜூலை 10 ஆம் தேதியும், டேனி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.