LKG Movie Review | எல்கேஜி திரைவிமர்சனம் – நவீன அமைதிப்படை
ஆர்.ஜே.பாலாஜி 120 ரூபாய் ரிவியூ என்கிற தலைப்பில் வானொலியில் செய்த திரைவிமர்சனம் மூலம் தமிழகம் முழுவதும் பாப்புலராக மாறினார்.
பல திரைப்பிரபலங்கள் இவரால் கண்கலங்காத நாளே இல்லை. அஞ்சான் படத்தை மரண ஓட்டு ஓட்டினார்.
இதனால் இவருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. தனஞ்செயன் மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றார்.
அதன்பிறகு ஆர்.ஜே. பாலாஜி ரிவியூ செய்யும் வேலையைவிட்டு விட்டு காமெடி நடிகராக வலம் வந்தார்.
எல்.கே.ஜி. படம் மூலம் நடிகராக உருவெடுத்துவிட்டார். அமைதிப்படை படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த நக்கல் அரசியல் படம் என்ற மகுடத்தை எல்கேஜி படத்திற்கு கொடுக்கலாம்.
இந்த காலத்தின் நவீன அரசியல் எப்படி நடிக்கிறது என்பதை முற்றிலும் வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது இப்படம்.
மீம் கிரியேட்டர்கள் எப்படி விலை போகின்றனர்? கார்பரேட் நிறுவனங்களின் தேர்தல் களப்பணி, நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் இப்படி பல நிகழ்வுகள் இந்த படத்தின் மூலம் வெட்டவெளிச்சமாக மாறியுள்ளது.
நாங்கள் புத்திசாலி என நினைத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் பலர் இன்னும் முட்டாள் தனமாகவே முடிவு எடுக்கின்றனர் என்பதற்கு படத்தின் கிளைமேக்சே சான்று.
அரசியல் செய்ய நல்லவனா இருக்கணும் அவசியம் இல்ல. நல்லா பேச தெரிந்தால் போதும் என்னும்போது இங்க எவனும் யோக்கியம் இல்ல என நெத்தி அடியாகப் படம் முடிகிறது.
ஒட்டுமொத்தப் படத்தின் வெற்றியும் அந்த ஒற்றை கிளைமேக்ஸில் உள்ளது. நாளைக்கே ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நின்றால் நல்லவன் என ஓட்டுப்போடும் இந்த உலகம்.
படத்திற்கு இசை, ஒளிப்பதிவு மிகமுக்கிய பக்கபலம். சுமாரான சீன்களையும் சூப்பரான சீன்களாக மாற்றிவிடுகிறது இக்கூட்டணி.
இயக்கம் புதுமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு. இது ஒரு அறிமுக இயக்குனர் படம் என எங்குமே தோன்றவில்லை.
அரசியல் நேரத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அரசியல் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய படமும் கூட.
மொத்தத்தில் எல்கேஜி நவீன அமைதிப்படை