விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: புதிய சாதனை படைத்த தளபதி! விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பர்த்டே டேக் அதிவேகமாக 6 மில்லியன் டுவீட்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பர்த்டே ஹேஷ்டேக் HBDTHALAPATHYVijay டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.
தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிகில்.
இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக மாஸ்டர் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இன்றுவரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இன்று விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாஸ்டர் டிரைலரும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனினும், அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், மாஸ்டர் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பர்த்டே ஹேஷ்டேக் HBDTHALAPATHYVijay டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஆம், உருவாக்கப்பட்ட 3 மணிநேரம் 10 நிமிடத்தில் 6 மில்லியன் டுவீட்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது வரை 7.5 மில்லியன் டுவீட்ஸ் வரை கடந்துள்ளது. இன்னும், அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் என்றாலே கோலிவுட்டில் சாதனையை உருவாக்குபவர் என்றும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட சாதனையை முறியடிப்பவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவரை கோலிவுட் கிங் என்றும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.