நிலாவுல கால் வச்ச நம்மல வெளியில கூட கால் வைக்க விடாம பண்ணிடுச்சு கொரோனா! நடிகர் விஜய் ஆண்டனி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
நிலவுக்கு ராக்கெட் விட்டோம். நிலவில் வாழலாம் என்றெல்லாம் நினைத்தோம். ஆனால், கொரோனா வந்து நம் அனைவரையும் வீட்டிலேயே முடக்கி வைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் விஜய் ஆண்டனி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
செவ்வாய் கிரகத்தை சீக்கிரமே பிடித்துவிடலாம் என்று நினைத்தோம். மனிதன் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்.
மனிதனுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஒரு வைரஸ் வந்து உலகம் முழுவதும் பரவி நம் அனைவரையும் வீட்டில் முடக்கி வைக்கும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அமைதியாக அரசு சொல்வதைக் கேட்டுக்கொண்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.
நம்மால் மற்றவர்களுக்கும், மற்றவர்களால் நமக்கும் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? அதன் தீவிரம் என்ன? நம் நாட்டுக்கும், வீட்டுக்கும் எவ்வளவு கஷ்டம்? என்பதையெல்லாம் முதலில் கூகுளில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற வைரஸால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அழிவு இருக்கிறது என்பதை ஆங்கிலத்தில் Contagion என்ற படமும், மலையாளத்தில் Virus என்ற டைட்டிலில் வைரஸ் தொடர்பான படமும் எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வெடுக்கும் போது, ஃப்ரீயாக இருக்கும் போது குடும்பத்தோடு சேர்ந்த இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லும் போது காசு இல்லாமல், அதெல்லாம் வாங்க முடியாமல் எத்தனையோ பேர் பசியில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையில்லாத ஏதாவது ஒரு பொருள் வீட்டில் இருந்தால் அதை எடுத்துச் சென்று சாலையின் ஏதாவது ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். தேவைப்படும் ஏழைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.
கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் போது ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க முயற்சி செய்யுங்கள்.
தனது வீட்டையும் மறந்து மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் நமக்காக சாலையில் இறங்கி சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது வலியை மதிப்பதாக இருந்தால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.