கொரோனா வைரஸ் COVID19 கிருமி நம்மை மிகவும் மென்மையாகவும், கருணையுடன் செயல் பட வைக்கிறது என விராத் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி அவரது மனைவி நடிகை ஷர்மாவுடன் இனைந்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார். தற்போது கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் தருணத்தில் அவர் கூறியது.
“இந்த COVID19 எனப்படும் கொரோனா வைரஸ் மக்களை மிகவும் வாட்டி வதைக்கிறது , அன்றாடப் பணிகளைத் தொடரவே பெரும் சவாலாக உள்ளது. பலர் வரும்காலங்கள் குறித்து மிகவும் கவலை அடைந்து கொண்டு இருக்கின்றனர் .
எனினும் இந்த கொரோனா வைரஸ் நம் அனைவரையும் மிகுந்த கருணையானவர்களாக மாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் நாம் கருணையோடு தான் இருந்தோம் தற்போது அது மேலும் அதிகரித்து உள்ளது.
முன்பின் தெரியாதவர், முகம் தெரியாதவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
மருத்துவர்கள் தங்கள் உயிரையே துச்சமென தீவிர சேவை புரிகின்றனர், அவர்களுக்கு சற்றும் குறையாமல் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அரசாங்க அதிகாரிகள் என பலரும் நம்முடைய நலனிற்காக அயராது உழைக்கின்றனர்.
நாம் அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும், அவர்களின் கடின முயற்சிகளை நாம் அலட்சியம் செய்து வீணடித்துவிட கூடாது.
இது மிக கடினமான தருணம் தான் என்றாலும் நமக்கு வேறு வழி இல்லை, எனவே பாதுகாப்புடன், விழிப்புடன் இருப்போம்“ என்று தெரிவித்தார்.
சா.ரா