தீபாவளி வரலாறு பெயர் அர்த்தம்: தீபாவளி என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது? மகாவீர்-சைனம், நரகாசூரன்-பூமாதேவி, ராமன்-இராவணன் புராண கதைகள்.
தீபாவளி பெயர் அர்த்தம்
Quora இணையத்தில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்கிறோம் என சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் ஒரு பனிப்போர் நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை மட்டும் வடக்கில் இருந்து வந்தது அல்ல, அந்தச் சொல்லுக்கு சொந்தக்காரியும் சமஸ்கிருதம் தான். இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தீபாவளி = தீபம் + ஆவளி தீபம் என்றால் தீப விளக்கு, தீ பந்தம் ஆவாளி என்றால் வரிசை அல்லது மாலை. மாலை என்பதை விட வரிசை என்பதே மிகப்பொருத்தம்.
- Rathna Aavali => ரத்னா ஆவளி => ரத்ன மாலை => ரத்ன வரிசை
- Mugdha Aavali => முஃதா ஆவளி =>முத்து மாலை =>முத்து வரிசை
- நாமாவளி (நாம +ஆவளி)
- வம்சாவளி (வம்சம்+ஆவளி)
போன்ற சொற்கள் எப்படி பெயர் அல்லது குடும்ப வரிசைகளை குறிக்கிறதோ, அதுபோல தீப (விளக்கு) + ஆவளி (வரிசை) என்பதே அதன் பொருள். பூக்களை வரிசையாக வைத்து கட்டுவதை தான் நாம் மாலை என்கிறோம்.
தீபம் என்ற வார்த்தை தீ பந்தம் என்ற தமிழ் வார்த்தையில் இருந்து மருவி தீபம் என்று வடமொழி ஏற்றுக்கொண்டது. அது தமிழிலும் கலந்துவிட்டது.
யாரோ பெற்ற பிள்ளைக்கு, தீப ஒளித் திருநாள் எனத் தமிழ்ப் பெயர் வைக்கிறோம் என கார்த்திகை தீபத்திருநாள் என்பதை நாளடைவில் தீபாவளி என மாற்றாமல் இருந்தால் சரி.
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?
இக்கேள்விக்கு விடை காண வேண்டும் என்றால் அதற்கு நம்மிடம் புராண கதைகள் மட்டுமே உள்ளது. நம்மிடம் உள்ள இலக்கியம், கல்வெட்டு, ஓவியம் என எதிலும் தீபாவளி என்ற ஒரு பண்டிகை பற்றி குறிப்பே இல்லை.
தீபாவளி புராணக் கதைகள்
நரகாசூரன் அழிந்த கதை
விஷ்ணு வராக அவதாரத்தின் போது, பூமா தேவி (பூமி) மீது காதல் கொள்கின்றார். அவர்களுக்கு பவுமன் என்ற மகன் பிறக்கிறான். பவுமன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் சாகா வரம் கேட்கிறான். ஆனால், பிரம்மன் எல்லோரும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என உன் அன்னையால் (பூமா தேவி) மட்டுமே உன்னைக் அழிக்க முடியும் என்று வரம் கொடுக்கிறார்.
சாகா வரம் பெற்ற பவுமன், நரகாசுரனாக அவதாரம் எடுக்கிறான். அவனை அழிக்க பூமா தேவியை அழகு மங்கையாக்கி, பவுமன் முன் நடனமாட கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்.
கிருஷ்ணரின் சூழ்ச்சி வலையை உணர்ந்துகொண்ட பவுமன், கிருஷ்ணனை நோக்கி அம்பை எய்துகின்றான். ஆனால் அதை பூமா தேவி தன் நெஞ்சில் வாங்கிகொண்டு அதே அம்பு மூலம் பவுமனை கொன்றதாக மஹாபாரதம் சொல்கிறது.
நரகாசூரன் இறந்த நாளை எண்ணை தேய்த்து குளித்து, தீபம் ஏற்றி கொண்டாடப்படுவதாக காலம் காலமாக சொல்லப்படும் கதை.
ராமன் – சீதை தீபாவளி
ராமன்- சீதா வனவாசம் முடித்து நாடு திரும்பிய பின்பு மக்கள் அவர்களை வரவேற்பதற்காக தீபம் ஏற்றி கொண்டாடினர் என ஒரு கதை உண்டு.
சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை, ராமன் அழித்து தர்மத்தை நிலை நாட்டியதால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு.
மகாவீர் இறந்த நாள்
சமணம் (சைனம்) மதத்தின் கடைசி தீர்த்தங்கர் மகாவீரர் விடிய விடிய சொற்பொழிவு ஆற்றிய பின்பு உட்கார்ந்த நிலையிலேயே வீடுபேறு அடைந்தார்.
அவரின் இறந்த தினத்தை சைன மதத்தினர் என்னை தேய்த்து தீபம் ஏற்றி கொண்டாடினர். அவர்கள் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு அவர்கள் மூலம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் பழக்கம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு.
சைனர்கள் நாளடைவில் இந்து மதத்துடன் கலந்துவிட்டனர். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
சைனர்கள் அவர்களின் நெறிகளை வளர்க்க தமிழ் மொழியை பயன்படுத்தினர். ஐம்பெருங்காப்பியங்கள் சீவக சிந்தாமணி, வளையாபதி சைனர்களால் இயற்றப்பட்டது.
ஐஞ்சிறுங்காப்பியங்கள் பெருங்கதை , நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய நூற்கள் மூலம் அவர்களின் நெறிகளை பற்றியும், கதைகளை பற்றியும் கூறியுள்ளனர்.
சைவம் மதம் அதற்கும் முன் தோன்றிய உலகின் மூத்த மதம் ஆசீவகம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
நவீன தீபாவளி
இன்று தீபாவளி பண்டிகை எண்ணெய் தேய்த்து குளித்து, விளக்கு ஏற்றி மட்டும் கொண்டாடப்படுவதில்லை. புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் முக்கிய இடம் வகிக்கிறது.
பட்டாசு இல்லாமல் தீபாவளியா? என்கிற அளவிற்கு நிச்சயம் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டது. ஆனால், தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என தெரியாமலே பலர் கொண்டாடுகின்றனர்.
இனியாவது நாம் யாருக்காக கொண்டாடுகிறோம் என தெரிந்து கொண்டு கொண்டாடுங்கள். மகாவீர், நரகாசுரன், இராவணன் இதில் நீங்கள் யாருடைய இறப்பை கொண்டாடுகிறீர்கள்.
மகாவீரருக்கு என்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே நரகாசுரன், இராவணன் என்றால் தென் இந்திய (திராவிடம்) மக்கள் கூடுதலாக ஒரு வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்! அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.