2.0 Review 2D – பாகுபலியை பஸ்பமாக்கி விட்டார் சங்கர்!
2 point 0 படத்தை முதல் நாள் பார்க்கவே மனமில்லை. ரிவியூ போடவேண்டும் என்று நினைத்தாலும் ஒரே மழை.
மழையின் நடுவே அடித்து புடித்து ஓடினால், தியேட்டரில் ரசிகர் ஷோ என்ற பெயரில் கட்டணக்கொள்ளை வேறு இருக்கும். இரவில் இருந்து என் வீட்டில் பவர்கட். காலை பத்து மணியாகியும் வரவில்லை.
வீட்டில் இருந்தாலும் வெட்டியாக இருக்க வேண்டும். அதற்கு படத்திற்கே போகலாம் என கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து, 250 ரூபாய்க்கு ப்ளாகில் டிக்கெட் வாங்கி திரையரங்கிற்குள் சென்றேன்.
படம் 3D இல்லை 2D மட்டுமே. 250 குடுத்து வெறும் 2D தானா. படத்துல பெருசா ஒன்னும் இருக்கப்போறது இல்ல. 3D-ல பாத்தாலாவது 4, 5 ஷாட்டு ப்ரமிப்பாவாது இருக்கும். அதுவும் போச்சா என நொந்து கொண்டேன்…
கிராபிக்ஸ்ங்கிற பேர்ல ஏற்கனவே பார்த்து சலிச்சு போன ஆங்கில படங்களின் தாக்கம் தான் இருக்கப்போகுது. வேற என்ன புதுசா இருக்கப்போகுது. படத்துல இருக்க ஓட்ட உடைசல் எல்லாத்தையும் ஒன்னு விடாம ரிவியூல கிழி கிழின்னு கிழிச்சிடனும்.
படம் துவங்கும் முன்பு வரை இதுதான் என் மனநிலை. படம் ஆரம்பித்து காட்சிகள் நகர நகர ஓட்டு மொத்த கவனமும் திரையில் மட்டுமே இருந்தது.
படம் எப்படி?
படத்தை பார்ப்பது 2D-யில் தான். ஆனால் ஒவ்வொரு காட்சியும் என்னை அசர வைத்துவிட்டது. இந்தப் படத்தை முதல் நாள் பார்க்காமல் விட்டால், நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன்.
இந்திய சினிமாவை கிட்டத்தட்ட ஹாலிவுட்டுடன் சமன் செய்துவிட்டார் சங்கர். அதுவும் வெறும் 500 கோடியில். இன்னும் ஒரு 500 கோடி கொடுத்தால், அவதாரை கூட விஞ்சி விடுவார் போல…
ஐ படத்திற்கு பின், ஷங்கர் பணத்தை வீணடிக்கும் இயக்குனர் எனப்பெயர் பெற்றார். அந்த நேரத்தில் சரியாக களம் இறங்கிய ராஜமௌலி, சங்கரை பீட் செய்துவிட்டார் என பேசப்பட்டது.
இந்த படத்திற்கு பிறகு ஓட்டு மொத்த இந்திய சினிமாவும், வாயடைத்துப்போகும். இன்னும் கொஞ்சம் அதிகம் செலவு செய்திருந்தால் ஹாலிவுட்டை கூட ஓவர்டேக் செய்துவிடும்.
கிராபிக்ஸ் பிரமாண்டம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் இப்படி ஒன்று கூட சோடை போகவில்லை.
படத்தில் என்ன பெருசா கதை இருக்கப்போகுது கிராபிக்ஸ் தான் படம். இப்படித்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் படத்தின் சென்டிமென்ட் காட்சிகள், இரும்பு இதயத்தைக்கூட கரைக்கும் அளவிற்கு உள்ளது.
ரஜினியின் ஓட்டுமொத்த திரை உலக வாழ்க்கைக்கு மகுடம் சூட்டும் படமாக இது அமைந்துவிட்டது என்பதே உண்மை.
படத்திற்கான ஓப்பனிங் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைவு தான். ஆனால் வரும் நாட்களில் படம் தாறுமாறாக ஓடும் என்பது மட்டும் உறுதி.
2.0 குறைகள்
படத்தின் குறை என்றால் அது கதை தான். இது ஒரு சயின்ஸ்பிக்சன் பேண்டசி படம். ஆரா, செல்போன் கோபுரங்கள், நெகடிவ் எனர்ச்சி இவை தான் அந்த பிரச்சனை.
ஆரா என்றால் பேய். அறிவியல் பேய் இல்லை எனச்சொல்லுகிறது. ஆனால் வசீகரன் பேய் இருக்கு, அதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளார்கள் என தவறான விளக்கம் கொடுத்துள்ளார்.
விண்வெளிக்கு பாசிடிவ் எனர்சியை மட்டுமே அனுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். அதெப்படி பிரித்தார்கள். மேலும் நல்லவர்களிடம் மட்டும் எப்படி செல்லும். தீயவர்கள் கண்டுபிடிக்க மாட்டார்களா?
இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம் என்பதைவிட பேண்டசி படம் எனச்சொல்லுவதே சிறந்தது. தவறான அறிவியல் பேசப்பட்டுள்ளது.
எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்…
http://mrpuyal.com/tamil-whatsapp-group/