சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா எண்ணிக்கை, மக்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுவதையே உணர்த்துகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில், 508 புதிய கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டு இறப்புகள் புதிதாக பதிவானதால் இதுவரை நோய் தொற்றிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,537 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த 37 மாவட்டங்களில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
கடந்த சில நாட்களாக கோயம்பேடு வணிக வளாகம் சென்று வந்தவர்கள், கூலி தொழிலாளர்கள் என கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 266 தொற்றுகள் பதிவாகின.
நேற்று முதல் மாநிலத்தில் தளர்வுகள் துவங்கியதால் சாலைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் தொடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மாநிலத்தில் சென்னை, 279 புதிய தொற்றுகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மாநகரில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் பதிவான 68 புதிய தொற்றுகளுடன் மொத்த எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 36 அரசு மற்றும் 16 தனியார் கோவிட்-19 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.
கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மக்கள் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தும்மும்போது / இருமும்போது, கைக்குட்டை / துண்டைப் பயன்படுத்தி முகத்தை மூடிக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கை கழுவ வேண்டும்.
முகமூடி அணிந்து வெளியில் வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவற்றை சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை எதிர்த்து போரிட முடியும்.