Jiiva Supports Modi; வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்: மோடிக்கு நடிகர் ஜீவா ஆதரவு! நடிகர் ஜீவா மோடிக்கு ஆதரவு தெரிவித்து வீட்டில் அனைவரும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக நடிகர் ஜீவா களமிறங்கியுள்ளார்.
ஊரெல்லாம் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயெ முடங்கியிருக்கும் நிலை வந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் அதிகமான உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 3030 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு, மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதற்கான பலரும் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகர் ஜீவா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
உலகத்தையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா கொடிய வைரஸை ஒற்றுமையாக இருந்து துரத்தி அடிப்போம் என்று எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில், மக்கள் அனைவரும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் மோடி நம்மை அழைத்திருக்கிறார்.
கடந்த 22 ஆம் தேதி ஜனதா கர்பியூ அன்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல காட்டிய அதே ஒற்றுமை, இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் அனைவரும் அவரவர் வீட்டில் தீபங்கள் ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ, செல்போன் டார்ச்லைட் ஒளிரவைத்தோ, இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது ஒற்றுமையை காட்டுவோம். சமூக விலகலை கடைபிடிப்போம். கொரோனாவை வீழ்த்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், டுவிட்டரில் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.