ஆடி மாத தரிசனம் 13: கண் கொடுக்கும் தெய்வம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள். கண்ணாத்தாள் திருக்கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்.
திருக்கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் நாட்டசரன் கோட்டையின் தெற்கே 2 கி.மீ. தொலைவில் அல்லூர், பனங்காடி, பிரண்டகுளம் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் தினமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக நாட்டரசன்கோட்டைக்கு தயிர் மற்றும் மோர் விற்க தினமும் வருவார்கள்.
இப்படி வருகின்ற வேளையில் குறிப்பிட்ட இடத்தில் தட்டி விடப்பட்டு கூடையில் இருந்த தயிர் எல்லாம் கீழே சிந்தி விற்க முடியாமல் போய்விடும்.
தினமும் தொடர்ந்து நடக்க துவங்கியது. இதனால் மிகுந்த மன வேதனையோடு வீடு திரும்பினர். மறுநாள் மன்னரிடம் சென்று கூறலாம் என கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அன்று இரவு மன்னன் கனவில் அம்மன் தோன்றி “நான் பூமிக்கு அடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரத்தடியில் இருக்கிறேன் “ என்று அடையாளம் காட்டி கூறினாள்.
மறுநாள் மன்னர் கிராம மக்களுடன் சேர்ந்து சென்று அவ்விடத்தில் தோண்ட சொன்னார். முதலில் தோண்டியவர் தோண்டுகின்ற போது கடப்பாறை நுனி அவர் கண்ணில்பட்டு இரத்தம் வடிந்தது.
இருப்பினும் அவர் வேறோருவரை அனுமதிக்காமல் தானே தோண்டினார். உள்ளே இருந்து அம்மன் விக்ரகம் வெளியே எடுக்கப்பட்டது.
அம்மன் விக்ரகம் வெளியே வந்ததும் அவர் பார்வை திரும்ப கிடைத்தது. அப்பொழுதே “கண் கொடுத்த நாயகி” கண்ணாத்தாள் என்று அழைக்கப்பட்டாள்.
அதன் பின் அம்மன் கிழக்கு நோக்கி வைத்தனர். ஆனால் அம்மன் கனவில் தோன்றி வடக்கு நோக்கி செல்வதாகவும். களியாட்டம் நடத்தி பலி இடுமாறு கனவில் கூறினாள்.
அதன் பின் அம்மனுக்கு 30 நாள் களியாட்டம் நடத்தி திருவிழா நடத்தினர். இறுதியில் நாயன்மார் குலத்தில் 500 ஆடுகள் பலியிட முடிவு செய்தனர். 499 ஆடுகள் வெட்டும் போது ஒரு சொட்டு இரத்தம் கூட கீழே வரவில்லை. 500 வது ஆட்டின் இரத்தம் மட்டுமே கீழே வந்தது.
அதன் பின் அம்மனை தூக்கி சென்று அருகில் இருக்கும் சிவன் கோவிலில் தென்புறம் நோக்கி வைத்தனர். மறுநாள் பார்த்த போது அம்மன் வடக்கு நோக்கி திரும்பி இருந்தாள்.
பின் மீண்டும் தூக்கி சென்றனர். தற்போது கருவறை இருக்கும் இடத்திற்கு வந்ததும் அங்கேயே வைத்து பிரதிட்டை செய்யுமாறு அசரீரி ஒலித்தது.
அதன் பின் அங்கேயே வைத்து கோவில் கட்டினர். நாட்டரசன்கோட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.
இன்றளவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை களியாட்ட திருவிழா 48 நாட்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.
கண் கொடுப்பாள் கண்ணாத்தாள்!
கருவறையில் எட்டு திருகரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அசுரனை இடக்காலில் மிதித்த வண்ணம் காட்சி தருகிறாள் அன்னை கண்ணுடைய நாயகி.
மக்களின் குறைகளை தீர்க்கும் சத்திய தெய்வமாக கண்ணாத்தாள் அருள்பாலிக்கிறாள். கண் நோய் பிரச்சனை உள்ளவர்கள் இங்கே வந்து கண்ணுடைய நாயகியை வழிபட கண் நோய் தீரும்.
அம்மை, திருமண தடை, குழந்தையின்மை என அனைத்து பிரச்சினைகளையும் அவளை வந்து வழிபட்டால் தீர்ந்து விடும் ஆனந்த வாழ்வு கிடைக்கும்.
அனைவரும் நாட்டரசன்கோட்டை கோட்டை சென்று கண்ணுடைய நாயாகியை வழிபட்டு நற்கதி அடைவோம்.
அமைவிடம்: கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயம், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை.
தரிசன நேரம்: காலை 6 முதல் மதியம் 1 வரை, மாலை 4 முதல் மாலை 9 வரை.
ஆடி மாத தரிசனம் தொடரும்..!