Pichaikkaran2 First Look Poster; பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! விஜய் ஆண்டனியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை சாதனா டைட்டஸ் நடித்திருந்தார்.
விபத்தில் கோமா நிலைக்கு சென்ற தனது அம்மாவை காப்பாற்றுவதற்கு 48 நாட்கள் பிச்சை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விஜய் ஆண்டனி அதனை செய்கிறார்.
சாமியாரின் அறிவுரைப்படி, விஜய் ஆண்டனி பல தடைகளையும், சோதனைகளையும் கடந்து 48 நாட்கள் பிச்சை எடுக்கிறார்.
இறுதியில், அம்மாவிற்கும் குணமடைய, காதலியான சாதனா டைட்டஸை காதலித்து கரம் பிடிக்கிறார்.
இதற்கிடையில், தான் ஒரு கோடீஸ்வரன் என்ற உண்மையை யாருக்கும் சொல்ல கூடாது என்பது நிபந்தனை. அதற்கேற்ப அம்மா, காதலி உட்பட யாரிடமும் அவர் சொல்லவே இல்லை.
விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட ரூ.45 கோடி வரையில் பிச்சைக்காரன் படம் வசூல் குவித்துள்ளது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிச்சயமாக இந்தப் படத்தின் 2ஆம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்பவே, விஜய் ஆண்டனியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில், விஜய் ஆண்டனி பின்புறம் திரும்பி நிற்பது போன்றும் கோட் அணிந்திருப்பது போன்றும், அவருக்கு முன்னால் மக்கள் நிற்பது போன்று மின்னல் வெட்டுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
மேலும், பிச்சைக்காரன் 2 படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனியே இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.