Vijay Antony; திமிரு புடிச்சவன் விஜய் ஆண்டனி பர்த்டே டுடே! இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இன்று தனது 45ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.
விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிறந்தவர் விஜய் ஆண்டனி. சென்னை லயோலா கல்லூரியில் ஒலி பொறியாளராக (Sound Engineer) பட்டம் பெற்றார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 1 என்ற தொலைக்காட்சி தொடரில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதன் பிறகு தளபதி விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் சாத்திக்கடி போத்திக்கடி என்ற பாடலை பாடவும் செய்துள்ளார். இவ்வளவு ஏன், காதலில் விழுந்தேன் என்ற படத்தில் வரும் நாக்க மூக்கா என்ற பாடலுக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு Cannes Golden Lion என்ற விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து, இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், பிலிம் எடிட்டர், ஆடியோ பொறியாளர், தயாரிப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.
நான் படத்தைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கொலைக்காரன் என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வந்த பிச்சைக்காரன் என்ற படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டும் கொடுத்தது.
தற்போது, தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, ஆனந்த கிருஷ்ணன் படம், விஜய் மில்டன் படம், பாலாஜி கே குமார் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தனது 45ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு வெளியாக இருந்த படங்கள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படமும் 2021 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.