Raghava Lawrence Donation; ராகவா லாரன்ஸ் மீண்டும் 25 லட்சம்: இதுவரை ரூ.3.65 கோடி நிதியுதவி! நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதலில் ரூ.3 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.
அதில், பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லடசம், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், ராயபுரம் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.75 லட்சம் என்று வழங்கியுள்ளார்.
சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இதையடுத்து, நலிந்த சினிமா விநியோகஸ்தர்களுக்கு உதவும் வகையில், ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.
ஆம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்கு என்று தனியாக ரூ.25 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு அனுப்பியிருந்த வீடியோவை பார்த்தேன். இந்த வீடியோவை அனுப்பி வைத்த நடிகர் உதயாவிற்கு எனது நன்றி. நான் நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் அளிக்கிறேன்.
ஒரு சிறிய வேண்டுகோள், எனக்கு நிறைய வீடியோக்கள் மற்றும் சங்கம் மற்றும் பொது மக்களிடம் இருந்து செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஒரு தனி மனிதனாக என்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு முயற்சி செய்கிறேன். இது மிகவும் வேதனையாக இருக்கிறது.
யாரேனும், நிதியுதவி அளிக்க விரும்பினால், எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட உதவி செய்யும். சேவையே கடவுள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் அளித்த ரூ.25 லட்சம் நிதியுதவியைத் தொடர்ந்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உதயா கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கம் ஃபெப்சி அமைப்பில் இல்லாததால், தான் செய்த உதவி அவர்களுக்கு சென்று சேரவில்லை என்பதை உணர்ந்த ராகவா லாரன்ஸ், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது, கொடுக்கும் மனமும் இருக்கவேண்டும்.
திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றிவைத்த ஒளிவிளக்கு. கொடுத்து சிவந்த கை, எங்கள் கருப்பு வைரம் ராகவா லாரன்ஸ். நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.