Raghava Lawrence; உலகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 200க்கும் அதிகாமானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவு நாளை உடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தினந்தோறும் அன்றாட சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஏழை ஜனங்கள் முதல் கோடி கோடியாய் சம்பாதிக்கும் கோடீஸ்வரர் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர்களுக்கு உதவும் வகையில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், அரசு அதிகாரிகள் என்று பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.
ஆனால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமாக எந்த உதவியும் செய்யக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப் பொருட்கள் வழங்கக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவை அரசு தயவு செய்து மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில், அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களை தந்திட இயலாது என்பதே எதார்த்தம்.
அந்த வகையில்,
ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நான் கடந்த வாரம் கொரோனா தடுப்பு நிதியை அளித்த கையோடு அடுத்த கட்டமாக வரும் 14 ஆம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் நானும் எனது நண்பர்களும் தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சில சேவை திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம்.
இந்த நிலையில்தான் தமிழக அரசு தன்னார்வலர்களுக்கு தடை விதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்ற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ராகவா லாரன்ஸ் என்று கோரிக்கை வைத்துள்ளார்.