Annaatthe Pongal 2021; அண்ணாத்த எப்போ வருவார்? அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்! ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்ணாத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இது ரஜினியின் 168 ஆவது படம். இந்தப் படத்தை விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.
ரஜினியின் அண்ணாத்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாட்டையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி படங்கள் திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், சில படங்கள் OTT ஆன்லைன் தளங்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொன்மகள் வந்தாள், பென்குயின், ஆர்கே நகர் என்று பல படங்கள் வரிசையாக OTT தளங்களில் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில், அண்ணாத்த படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அண்ணாத்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தீம் மியூசிக் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தின் கவர் பிக்சரையும் அண்ணாத்த பொங்கல் 2021 என்று இருக்கும்படி மாற்றியமைத்துள்ளது.
இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வந்த பேட்ட படமும், 2020 ஆம் ஆண்டு வந்த தர்பார் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.