Ramya Pandian; வடிவேலு ஸ்டைலில் புத்திமதி சொன்ன ரம்யா பாண்டியன்! நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், டோக்கியோ என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என்று கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரொனா வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்புக்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
எனினும், நோய் பரவாமல் தடுப்பதும், அதிலிருந்து விலகியிருப்பதும் நம் ஒவ்வொருவரது கடமை என்று அரசும், மருத்துவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ரம்யா பாண்டியன் கூறுகையில், உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் வந்துள்ளது. அதற்கு எதிராக நாம் போராடிதான் ஆகவேண்டும்.
ஆனால், ஒருவரால் மட்டுமோ அல்லது அரசால் மட்டுமோ முடியாது. அரசு தரப்பில் இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக போராட முடியும். இனிமேல் கொரோனா பரவாமல் தடுப்பதும் நமது கையில்தான் இருக்கிறது.
அனைவருமே வீட்டில் இருங்கள். சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு இரண்டுமே இந்தமாதிரி நேரத்தில் ரொம்பவே முக்கியம்.
நாம்தான் தேவையில்லாமல் வெளியில் சென்று அந்த வைரஸை பரப்புகிறோம். அப்படியில்லாமல் இருந்தால் அதற்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.
ஒருவரை தொடுவதன் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோத்தான் இந்த வைரஸ் பரவுகிறது. தயவு செய்து வீட்டில் இருங்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும் பிஸியாக இருந்திரலாம், ஆனால், வீட்டில் சும்மா இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்…இருக்கிறது. இதனை குடும்பத்திற்கான நேரமாக நாம் செலவிடலாம்.
நான் அம்மாவிற்கு சமையலுக்கு உதவி செய்கிறேன். பணிப்பெண் வரமாட்டாங்க. ஆகையால், வீட்டு வேலை எல்லாம் நானும், அம்மாவும் சேர்ந்து செய்வோம்.
வீட்டில் டிவி, செல்போன், இன்டர்நெட் என்று எல்லாமே இருக்கு. வீட்டிற்குள்ளேயே இருந்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நாம் செய்யலாம்.
இப்போது வரைக்கும் பொதுமக்கள் வெளியில் சென்று வருகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது கஷ்டமாகவும், பயமாகவும் இருக்கிறது.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிராக போராடுவோம். நமது வருங்கால எதிர்காலத்திற்காகவும், நமது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் கொரோனாவிற்கு எதிராக போராடுவோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.