10 ஓவர், 10 விக்கெட், 11 ரன்: இது ரெக்ஸ் வேட்டை!
சமீப காலமாக, இந்தியக் கிரிக்கெட் அணி உலக அளவில், எதிரணியினரை துவம்சம் செய்து வருகின்றது. கிரிக்கெட் விளையாட்டு, 90 சதவீத இந்தியர்களின் உயிர் மூச்சாகிவிட்டது.
தேசிய போட்டிகள் மட்டுமல்ல, மாநில போட்டிகளிலும் அதிரடிகளுக்குப் பஞ்சமில்லை. டெஸ்ட் போட்டிகள் என்றால், இந்திய இளம் வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று.
ஒரே இன்னிங்சில் 1000 ரன்களைக் கடந்தார் மும்பையை சேர்ந்த பிரணாவ் தனவாடே. ஒரே போட்டியில், 556 ரன்களைக் குவித்தார் பிரியான்ஷு மோலியா (14 வயது).
தற்பொழுது, பவுலிங்கில் இந்திய இளம் வீரர் ஒருவர் அசத்தியுள்ளார். மொத்த அணியின் விக்கெட்டுகளையும், ஒத்தை ஆளாக வேட்டையாடியுள்ளார்.
மணிப்பூரை சேர்ந்த ரெக்ஸ் ராஜ்குமார் (18 வயது) என்ற வீரர், இந்த சாதனைக்குச் சொந்தக்காரர். கூச் பெஹர் கப் போட்டியில், ஆந்திராவுக்கு எதிராக நடந்த விளையாட்டில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ரெக்ஸ் ராஜ்குமார் வீசியது 9.5 ஓவர்கள். விட்டுக்கொடுத்தது வெறும் 11 ரன்கள் மட்டுமே. பறித்தது 10 விக்கெட்டுகள். 5 போல்ட். 3 கேட்ச். 2 எல்பிடபிள்யூ. (மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுகள் உட்பட)
ரெக்ஸ் ராஜ்குமாரின் வேட்டையை பார்த்து சகவீரர்களே திக்குமுக்காடி உள்ளனர். இப்படி பலே பலே வீரர்களை கண்டு, பிபிசிஐயும் சற்று கலக்கத்தில் உள்ளது.
எதிர்காலத்தில், தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது மிகுந்த சவாலாக இருக்கும் என பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கருதியுள்ளனர்.