சியாமளா நவராத்திரி என்றால் என்ன? அதன் சிறப்புகள். நவராத்திரி கேள்வி பட்டிருப்போம் அதென்ன சியாமளா நவராத்திரி; மொத்தம் 4 நவராத்திரிகள் உள்ளது பற்றித் தெரியுமா?
சாக்தம் மற்றும் நவராத்திரி சிறப்புகள்
சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக்கொண்டு பூஜிப்பது. இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
பொதுவாக நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய நவராத்திரி மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும். அதுமட்டுமன்றி ஒரு ஆண்டுக்கு 4 நவராத்திரிகள் உள்ளன.
ஆஷாட நவராத்திரி – ஆனி மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது வராகி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
சாரதா நவராத்திரி – புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்குரிய நவராத்திரி ஆகும்.
சியாமளா நவராத்திரி – தை மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இராஜ மாதங்கி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
வசந்த நவராத்திரி – பங்குனி மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது லலிதா திரிபுரசுந்தரிக்குரிய நவராத்திரி ஆகும்.
சியாமளா தேவி என்பவர் யார்?
மாதங்கியே இராஜ சியாமளா என்றும் மஹா மந்திரினி என்றும் அழைக்கப்படுகிறாள். மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தமையால் மாதங்கி என்ற திருநாமம் கொண்டாள். இவள் தசமஹாவித்யாவில் ஒன்பதாவது வித்யா ஆவாள்.
வேத மந்திரங்களுக்கெல்லாம் அதிதேவதை என்பதால் மந்திரிணி எனப்படுகிறாள். கல்வி, வித்தை, ஞானம் ஆகிய அனைத்திற்கும் இவளே ஆதாரம்.
லலதாம்பிகையின் கரும்பில் இருந்து தோன்றியவள். லலிதா திரிபுரசுந்தரியின் மஹா மேரு சாம்ராஜ்யத்தில் இவளே மந்திரி ஆவாள். அம்பிகையின் வலப்புறம் அமைச்சராக சியாமளாவும் இடப்புறம் படைத்தலைவியாக வராகியும் உள்ளனர்.
சியாமளாவின் திருவுருவை லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் மற்ற தாந்திரக புராணங்கள் வெவ்வேறு விதமாக விவரிக்கின்றன.
மாதங்கியின் தோற்றம்
இராஜ சியாமாளவின் தோற்றத்தை காளிதாசர் தன்னுடைய ஸ்யாமளா தண்டகம் என்ற நூலின் தியானத்தில் அழகாக வருணித்துள்ளார்.
“மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் | மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி || சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே | புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண – ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||”
மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிக்கும் விருப்பம் உடையவள். பச்சை நிறம் கொண்டவள். மதங்க முனிவரின் புதல்வி. நான்கு திருக்கரம் உடையவள் பாசம், அங்குசம், மலர் அம்பு கொண்டவள். சந்திர கலை தலையில் அணிந்தவள். குங்கும சாந்தை மார்பில் தரித்தவள் என்று அம்பிகையின் தோற்றத்தை வருணிக்கிறார்.
அம்பிகையின் கையில் கிளியும் இடம்பிடித்திருகின்றது. இது வாக்கு திறமையை குறிக்கிறது. இவளின் நிறம் பச்சை ஆகும். பச்சை புதனுக்குரிய நிறம் இது ஞானத்தை குறிக்கிறது.
சியாமளா உபாசனை
சியாமளாவை உபாசிப்பவர்களுக்கு வாக்கு பலிதம், கல்வி, வித்தை, நுண்ணறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, ஞானம், மனதை ஒருநிலை படுத்தும் திறன், புத்தி கூர்மை, இசை, தேர்வில் வெற்றி போன்றவை தானாக வந்து சேரும்.
இவளை உபாசிப்பது கடுமையான விஷயம் என்று தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.
மதுரை மீனாட்சியம்மன்
சியாமளாவின் அம்சமாக மதுரை மீனாட்சி திகழ்கிறாள். இவளை வழிபடுவதும் மாதங்கியை வழிபடுவதும் ஒன்றே ஆகும்.
இந்த சியாமளா நவராத்திரியில் “மீனாட்சியம்மை பிள்ளை தமிழ்” படிப்பது நற்பலன்களைத் தரும்.
சியாமளா நவராத்திரியானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த சியாமளா நவராத்திரியின் 5-வது நாள் பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது.
எனவே இந்நாளில், வடநாட்டில் விஜயதசமி போன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வர். எனவே இந்நவராத்திரியானது சரஸ்வதி தேவியின் அருளையும் பெற்று தரும்.
சியாமளா நவராத்திரியில் எப்படி பூஜிக்க வேண்டும்?
தை அமாவாசை முடிந்து பிரதமை அன்று கலசத்தில் புனித நீர் நிரப்பி மாவிலை, தேங்காய் வைத்து; திலகம் இட்டு; மலர் மாலைகள் சூட்டி; பச்சை வஸ்திரம் சாத்தி; அதில், இராஜ மாதங்கியை ஆவாஹனம் செய்து; சியாமளா தண்டகம், சியாமளா அஷ்டோத்திரம் மற்றும் சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
வீணை மீட்ட தெரிந்தவர்கள் அம்பிகை முன் வீணை மீட்டி ஆராதிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளை தமிழ் மற்றும் மீனாட்சியம்மை பதிகம் பாடலாம்.
அம்பிகைக்கு பிடித்தமான பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை ஒன்பது நாட்களும் படைக்க வேண்டும். மாதுளை சியாமளாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும்.
இவளை பூஜிக்கும் போது மனத்தூய்மை மிக முக்கியமான ஒன்றாகும். மனம் அலைபாய்வதைத் தவிர்த்து முழு மனதோடு வணங்கவேண்டும்.
2020-இல் சியாமளா நவராத்திரி
2020-இல் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் அன்னை இராஜ சியாமளாவை பூஜித்து அனைத்து நற்பேருகளை நாமும் பெறுவோம்.