Home சினிமா இந்திய சினிமா Njan prakashan: ஞான் பிரகாஷன் படம் பற்றி ஒரு பார்வை!

Njan prakashan: ஞான் பிரகாஷன் படம் பற்றி ஒரு பார்வை!

702
0
Njan Prakashan ஞான் பிரகாஷன் Malayalam Movie Watch online Movie Review Tamil

Njan Prakashan: ஞான் பிரகாஷன் எனும் மலையாளப்படத்தை பற்றிய ஒரு பார்வை. Njan Prakashan Malayalam Movie Watch online on Netflix. Movie Review Tamil

மலையாள சினிமாக்களில் பெரும்பாலான திரைப்படங்கள் நம் சராசரி வாழ்வை ஒற்றியே இருக்கிறது. இதனை மீண்டும் நிறுபிக்கும் வகையில் வந்த திரைப்படம்தான் ஞான் பிரகாஷன்.

கதைக்கரு

எந்த ஒரு வேலையும் செய்யாமல் பொய்களையும்,கஞ்சதனத்தையும், சுயநலத்தையும்,
பொறாமையும் பிறர் மீது அன்பை வெளிப்படுத்தாமலும் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹீரோ.

தன்னிடம் இருக்கும் அத்தகைய இழிவான குணங்களை, ஒரு குறிப்பிட்ட நிகழ்வினால் இழந்து வாழ்க்கையை  எவ்வாறு வாழ ஆரம்பிக்கிறான் என்பதே கதையின் ஆதிக்கரு.

கதைப்போக்கு

கதையைக்கொண்டு வெறுமனே தத்துவங்களை சுமந்தவாறே திரைப்படம் என்றிருக்கும் என்று எண்ணினால், அது தவறு.

இக்கதைகருவினுள் காதல், ஏமாற்றம், ஏமாற்றும் தனம், அன்பு, துன்பம், காமெடி போன்ற கமர்ஷியல் படங்களுக்கான கூறுகளும் உள்ளது. சண்டைக்காட்சிகளைத் தவிர!

காமெடிகளை பிரதானமாகக் கொண்டே இப்படம் நகருகிறது. அதற்காக ஏதோ இரு நகைச்சுவை கதாப்பாத்திரங்களை வைத்து கதைக்கு சிறிதும் ஒவ்வாத வசனங்களை கொண்டில்லாமல், இயல்பாய் நிகழ்கிறது அனைத்து நகைச்சுவைகளும்.

ஒரு கல்யாண வீட்டில் முந்தியடித்துக்கொண்டு சாப்பிடப்போவது; தன் நண்பனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வை கலைத்து, பணத்திற்காக அந்த பெண்ணை பிரகாஷன் கல்யாணம் செய்ய முயற்சிகின்றார்.

ஊழல் செய்வதற்காகவே கட்சியில் சேர ஆசைப்படுவது; தன் காதலித்த பெண்ணுக்கு வசதி இல்லாத காரணத்தால் அப்பெண்ணிடமிருந்து விலகுவது என பிரகாஷன் எனும் காதாப்பாத்திர வடிவமைப்பை, கதைக்கேற்ப நிகழ்த்தியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனுக்கு ஒரு கட்டத்தில் ஏமாற்றம் ஏற்படுகிறது. அப்போது நான்தான் படத்தின் நாயகன் என்று எதிர் கேள்விகளை வீசாமல் கருத்துகளை உரைக்காமல், நாயகன் கதாப்பாத்திரம் சோர்வடைந்து அச்சூழலை விட்டு நகர்ந்து வேறு ஒரு சூழலுக்கு செல்கிறது.

ஆம்! இப்புதிய சூழலில்தான் அந்த உள்மாற்றங்கள் நிகழ்கின்றன. படம் பார்க்கும் நமக்குள்ளும் அந்த மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. படம் முடிந்தபின்னும்
அதைப்பற்றிய சிந்தனைகள் மனம் முழுக்க நிரம்பிவிடுகிறது.

அடுத்த நகர்வு

கதையின் மற்றொரு படிநிலையில் உடல் நிலை சரியில்லாத பத்தாம் வகுப்பே படித்துக்கொண்டிருக்கும், பெண்ணை பார்த்துக்கொள்வதற்காக பிரகாஷன் செல்கிறான்.

அங்கு நடைபெறும் நிகழ்வுகளை காமெடி கலந்த ஏமொஷனலாக சொல்லியிருக்கிறார்கள்.

ஏமொஷனல் என்று சொல்லும்போது, தூறலைப்போல் மென்மையாக காட்சிகளையும் வசனங்களையும் வைத்துவிட்டு நம்மை கண்கலங்கச்செய்கிறார் இயக்குநர்.

இத்திரைப்படம் தன்னை பார்ப்பவர்களை உத்தமர்களாக மாற்றுவதற்காக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட பாணியில் இருக்காது.

ஒருவரின் கதையை, அவர் சந்தித்த மனிதர்களை, அதனால் ஏற்பட்ட மாற்றத்தை நாங்கள், உங்களுக்குச் சொல்கிறோம் பாருங்கள் என்று நம்மிடம் கொடுத்துவிடுகிறது திரைப்படம்

இயக்குனரும், கதையாசிரியரும்

கதை சீனிவாசன் அவர்கள் எழுத சத்யன் இயக்கி உருவானதுதான் “ஞான் பிரகாஷன்”. பிரகாஷன் எனும் கதாபாத்திரம் செய்யும் செயல்கள் திரைப்படத்தை பார்க்கும் மக்களின் மனங்களில் சலனத்தை ஏற்படுத்துகிற இடத்தில் இயக்குனரின் வெற்றி  நிகழ்ந்திருக்கிறது.

நாயகன் கதாப்பாத்திரம் செய்யும் செயல்களில் ஏதேனும் ஒன்றையாவது நாம் செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அதுதான் அச்சலனத்திற்கு காரணமாக அமைகிறது. அதற்காக மனித மனங்களை சுயவெறுப்படைய செய்யாமல் தன்னைத்தானே ஒரு உள்ளாய்வு செய்யும் தளத்தை கதை உருவாக்கி கொடுத்துள்ளது.

ஒருவர் எழுதிய கதையை முறைப்படி உரிமைப்பெற்று மற்றொருவர் இயக்கும் நிகழ்வு மலையாள சினிமாக்களில் அவ்வபோது நடக்கிறது.

இப்படிப்பட்ட முயற்சிகள் நம் தமிழ் சினிமாக்களிலும் நடைபெற்று வருவது சந்தோஷமளிக்கிறது. ஆம்! இதுவெல்லாம் சினிமாத்துறையில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி.

நடிப்பு

ஃபகத் பாசில் எனும் நடிப்பு அரக்கனிடம் இப்படியொரு கதை சிக்கியிருப்பது இத்திரைப்படத்திற்கு ஆகப்பெறும் பலம்.

ஃபகத்தை தவிர்த்து யாரையும் கற்பனை செய்து கூட பார்க்கத்தோன்றவில்லை. அந்த கண்களும், வசன உச்சரிப்புகளும், உடல் அசைவுகளும் பிரகாஷனைத்தான் காட்டுகிறதே தவிர ஃபகத்தை காட்டவில்லை.

சீனிவாசன் அவர்களின் நடிப்பும் பாவனைகளும் படத்தை இயக்குநர் நினைத்தபடியே கொண்டு செல்ல உதவுகிறது.

நடிகர்களிடம் இருந்து எவ்வாறு நடிப்பை பெற வேண்டும் என்பதில் இயக்குநர் சத்யன் மிகவும் தேர்ந்தவர் என்பதுபோல், அனைவரின் நடிப்பும் கதைக்கு பலமாகவே உள்ளது.

இசையும், ஒளிப்பதிவும் கதைக்கு சங்கடம் விளைவிக்காமல் இருந்தாலே போதுமென்பது போன்றுதான் சமீபத்திய திரைப்படங்களில் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் ‘ஞான் பிரகாஷனுக்கு’ அவ்விதத்திலும் ஏறுமுகம்தான். ஆம்! படத்தை, இசையும் ஒளியும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லை.

மலையாளத்தின் மற்றொரு தரம் “ஞான் பிரகாஷன்”. ‘ஞான் பிரகாஷனின்’ வாழ்வு நெட்பிளிக்ஸில் (Netflix) காணக்கிடைக்கிறது.

Previous article18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleதேங்காய் அழுகினால் அபசகுணமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here