கெத்துக்காட்டிய தேமுதிக; கெஞ்சல் தேமுதிகவாக மாறியுள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, நம்மை கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் தேமுதிக தலைவர்களுக்கே இருந்தது.
அப்போதே காங்கிரஸ் கட்சி மூலம் திமுகவிற்கு தூது அனுப்பி வந்தனர். ஆனால், அப்போது கூட தேமுதிகவை பெரிய அளவில் திமுக நினைக்கவில்லை.
ஆனால் பாமக-அதிமுக கூட்டணி உருவாகியதும் தமிழக அரசியல் தலைகீழான ஒரு மாற்றத்தைச் சந்தித்தது.
தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டால் திமுக கூட்டணியைவிட ஒருபடி மேலே சென்றுவிடலாம் என அதிமுக பேச்சுவார்த்தையை துவங்கியது.
அவ்வளவு தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மாறிப்போனது தேமுதிகவின் நிலைப்பாடு.
இந்தத் தேர்தலில் முடிந்த அளவு வாரிச் சுருட்டிக்கொள்ளலாம் என பேராசையுடன் காய் நகர்த்தியுள்ளனர்.
கூட்டணி மேடைக்கு வருகிறோம் என பாஜகவுடன் பேரம் பேசிவிட்டு, அடுத்த நொடியே திமுக துரைமுருகனுக்கு போன் போட்டு உங்க கட்சிக்கு வரவா எனவும் பேசியுள்ளார் சுதீஷ்.
சீட்டும் இல்ல தலைவரும் இல்ல எனக் கறாராகக் கூறிவிட்டார் துரைமுருகன். உடனே மீடியாக்களை அழைத்த சுதீஷ் நாங்கள் நிச்சயம் பாஜக கூட்டணியில் இடம்பெறுவோம் என கூற ஆரம்பித்துவிட்டார்.
அதுவரை கூட்டணி பற்றி வாய் திறக்காதவர் உடனே பாஜக கூட்டணி எனக்கூறி விட்டார். காரணம் இரண்டும் பக்கம் வேண்டாம் என ஒதுக்கிவிட்டனர்.
தற்பொழுது இரண்டு பக்கமும் கொஞ்சிக்கொண்டு இருக்கிறது தேமுதிக கட்சி. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும்.