கொரோனா பாதிப்பில் 5-ம் இடத்தில் இந்தியா உள்ளது. நேற்றைய கணக்கெடுப்பு ஒன்றின்படி இந்தியாவில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2.44 லட்சத்தினை கடந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2.44 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் உலக நாடுகள் வரிசையில் ஸ்பெயினை பின்னுக்குத்தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக 2,40,978 நோயாளிகள் என்ற எண்ணிகையுடன் ஸ்பெயின் 5-வது இடத்தில் இருந்தது. இந்த எண்ணிக்கையை இந்தியா கடந்த நிலையில் தற்போது ஸ்பெயின் 6-ம் இடத்திற்கு சென்றுள்ளது.
இந்த கொரோனா பாதிப்பு பட்டியலில் உலகளவில் அமெரிக்க தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவரும் நிலையில் பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களில் இருந்து வருகின்றன.
நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,887 ஆக பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 294 ஆக பதிவானதால் இதுவரை நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 6,642 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 48.27 ஆக இருந்த கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதமானது சனிக்கிழமை 48.20 ஆக சரிந்தது.
இந்தியாவில் மகாராஷ்டிரா,டெல்லி, குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்கள் இது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோய் தொற்றுகளை பதிவுசெய்துள்ளன.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த எண்ணிக்கையானது 10 ஆயிரத்தை நெருங்குகிறது. நாட்டில் மஹாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.